/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கேரளாவுடன் 13 ஆற்றுநீர் பிரச்னைகள்
/
கேரளாவுடன் 13 ஆற்றுநீர் பிரச்னைகள்
ADDED : ஜூன் 10, 2024 02:09 AM
பல்லடம்;''கேரள மாநிலத்துடன் உள்ள, 13 ஆற்று நீர் பிரச்னைகளுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்'' என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி கூறியதாவது: நதிகள் தேசியமயமாக்கப்படாததால் மாநிலங்களிடையே நதிநீர் பிரச்னை நீடித்து வருகிறது. தி.மு.க., கூட்டணி கட்சி ஆட்சி அமைத்துள்ள கர்நாடக மாநிலத்தில் பேசி மேகதாது அணை கட்டுவதை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் உரிய நீரை பெற்று இந்த ஆண்டுக்கான குறுவை சாகுபடி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஆனைமலை- - நல்லாறு, பாண்டியாறு - -புன்னம்புழா திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையே உள்ள, 13 ஆற்றுநீர் பிரச்னைகள் குறித்து கேரள அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
தமிழக அரசு அரசாணையின்படி, விவசாயிகளுக்கு, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் தங்கு தடையின்றி வழங்க வேண்டும். நெல் குவின்டாலுக்கு 2,500 ரூபாய் மற்றும் கரும்பு டன்னுக்கு, 4 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய், கடலெண்ணெய் வினியோகிக்க வேண்டும் என, தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மத்திய - மாநில அரசுகள் இன்றுவரை செவி சாய்க்காமல் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.