/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் அருகே 1.5 டன் குட்கா பறிமுதல் 7 பேர் கைது; குடோனை தேடும் போலீஸ்
/
திருப்பூர் அருகே 1.5 டன் குட்கா பறிமுதல் 7 பேர் கைது; குடோனை தேடும் போலீஸ்
திருப்பூர் அருகே 1.5 டன் குட்கா பறிமுதல் 7 பேர் கைது; குடோனை தேடும் போலீஸ்
திருப்பூர் அருகே 1.5 டன் குட்கா பறிமுதல் 7 பேர் கைது; குடோனை தேடும் போலீஸ்
ADDED : மே 30, 2024 02:11 AM

திருப்பூர்:திருப்பூரில் விற்பனைக்கு கடத்தி வரப்பட்ட 1.5 டன், தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான, குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, ஏழு பேரை கைது செய்தனர். பதுக்கி வைக்கப்படும் குடோனை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார் அருகே கோவை - சேலம் பைபாஸ் ரோட்டில் கடந்த, 24ம் தேதி இரு கார்கள் விபத்தில் சிக்கியது. தகவலறிந்து பெருமாநல்லுார் போலீசார் சென்றனர். காரில் இருந்த நபர்கள் தப்பி சென்றனர்.
காரை சோதனையிட்ட போது, உள்ளே மூட்டை, மூட்டையாக குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரு காரையும் பறிமுதல் செய்து, ஆயிரத்து, 26 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, தப்பி சென்றவர்கள் குறித்து தனிப்படையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
ஏழு பேர் கைது
இச்சூழலில், பெருமாநல்லுார் போலீசார் திருப்பூர் ரோட்டில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். சந்தேகப்படும் விதமாக வந்த காரை சோதனை செய்தனர். காரில், விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட, 632 கிலோ இருந்தது. அதை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக, ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ்குமார், 22, தினேஷ்குமார், 21, ஜோரராம், 26, டூராராம், 24, மாதாராம், 26, ஓபாராம், 30 மற்றும் கோபாராம், 35 என, ஏழு பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
கைது செய்யப்பட்டுள்ள, ஏழு பேரில், இரு தினேஷ்குமாரும் பெங்களூரில் இருந்து அவிநாசிக்கு கடத்தி வந்தது தெரிந்தது. இருவரும் அவிநாசியில் உள்ள ஜோரராம், மாதாராம், டூராராம் மற்றும் பெருமாநல்லுாரில் உள்ள ஓபாராம், கோபாராம் ஆகியோருக்க விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரிந்தது.
கடந்த, இரு நாட்களுக்கு முன் விபத்துக்குள்ளான காரில், ஜோரராம் வந்ததும் தெரிய வருகிறது. இதில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகின்றோம். போலீசில் சிக்காமல் இருக்க, அவிநாசி, பெருமாநல்லுார் போன்ற சில இடங்களில் குடோன் வைத்து, அங்கு பதுக்கி கடைகளுக்கு சப்ளை செய்தது தெரிய வருகிறது. அந்த குடோன் எங்கு உள்ளது என்பது குறித்து தேடி வருகிறோம். பெங்களூரில் இருந்து யார் அனுப்பியது, கோவை, திருப்பூர் போன்ற பகுதியில் பிரதான டீலர்கள் யார் எனவும் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.