ADDED : செப் 14, 2024 11:01 PM
'அம்மா, டவுன்ஹால் வரைக்கும் போயிட்டு வர்றேன்...' என குரல் கொடுத்து, அது தாயின் செவியை எட்டுவதற்குள், மின்னல் வேகத்தில், 22 வயதான சூட்டிப்பான அந்த இளைஞர் பைக்கில் பறந்தார்.
அடுத்த மூன்று நிமிடத்தில், 'ஏம்மா... அந்த கருப்பு கலர் வண்டியில வந்த உங்க புள்ளைக்கு ஆக்ஸிடென்ட்டாகி, ஜி.ெஹச்-ல இருக்கான். கொஞ்சம் சீக்ரம் வாங்க,' என போலீஸ் ஏட்டு ஒருவர் போனில் சொன்னதை கேட்ட, தாய்க்கு தலை சுற்றியது. பதறியடித்தவாறே, ஜி.ெஹச்-க்கு ஓட்டமும், நடையுமாக கண்ணீருடன் சென்றார்.
இப்படி ஒன்றல்ல... இரண்டல்ல.... சராசரியாக, 11 பேர் டூவீலரில் சென்ற விபத்தில் சிக்கி, கை அல்லது கால் மற்றும் உடல் உறுப்புகளில் காயம் அடைந்து, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவதாக விவரங்கள் வெளியாகியுள்ளது.
வாழ வேண்டிய வயதில், நிரந்தரமாக ஊனமாகும் அளவுக்கு, கை,கால் உடைந்து, உடல் உறுப்புகளில் காயமுடன் வரும் வாலிபர்களை பார்க்கையில், மருத்துவக்குழுவினர் வேதனை அடைகின்றனர்.
குறிப்பாக, தினமும், மாலை, 6:00 மணிக்கு மேல், மறுநாள் காலை, 6:00 மணிக்குள், ஏழுக்கு மேற்பட்டோர் அனுமதியாகி விடுகின்றனர். தினசரி எட்டு முதல், 12 பேர்; மாதம், 370 முதல், 380 பேர் வீதம், ஏப்., முதல் ஆக., வரையிலான கடந்த ஐந்து மாதத்தில், 1,900 பேர் விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வந்துள்ளனர்.
அதில், இறந்தவர்கள் எண்ணிக்கை, 20க்கும் குறைவாக உள்ளது. அதே நேரம், கை, கால், முகம், முதுகு, இடுப்பு பகுதியில் பலத்த காயம்பட்டு, தொடர்சிகிச்சை பெற வேண்டிய நிலையில் பலரும் உள்ளனர்.
அடிபட்டு, கட்டு போட மட்டும், இருபது பேர் தினமும் வருகின்றனர், என்கின்றனர், மருத்துவமனை டாக்டர்கள்.
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தினமும், மாலை, 6:00 மணிக்கு மேல், மறுநாள் காலை, 6:00 மணிக்குள், ஏழுக்கும் மேற்பட்டோர், சாலை விபத்துகளில் சிக்கி சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். தினசரி எட்டு முதல், 12 பேர்; மாதம், 370 முதல், 380 பேர் வீதம், ஏப்., முதல் ஆக., வரையிலான கடந்த ஐந்து மாதத்தில், 1,900 பேர் விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வந்துள்ளனர்.