/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
21வது இடம்! 10ம் வகுப்பு தேர்ச்சியில் திருப்பூர்... பின்தங்கியதால் கல்வித்துறை அதிர்ச்சி
/
21வது இடம்! 10ம் வகுப்பு தேர்ச்சியில் திருப்பூர்... பின்தங்கியதால் கல்வித்துறை அதிர்ச்சி
21வது இடம்! 10ம் வகுப்பு தேர்ச்சியில் திருப்பூர்... பின்தங்கியதால் கல்வித்துறை அதிர்ச்சி
21வது இடம்! 10ம் வகுப்பு தேர்ச்சியில் திருப்பூர்... பின்தங்கியதால் கல்வித்துறை அதிர்ச்சி
ADDED : மே 11, 2024 12:27 AM
திருப்பூர்;பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், மாநிலத்தில் முதலிடம் பெற்ற திருப்பூர், பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், 21வது இடம் பெற்றது. கடந்தாண்டு, 11வது இடம் பெற்ற திருப்பூர், நடப்பாண்டு, பத்து இடங்கள் பின் தங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 14 ஆயிரத்து, 710 மாணவர்கள், 15 ஆயிரத்து, 470 மாணவியர் என, 30 ஆயிரத்து, 180 பேர் தேர்வெழுதினர். இவர்களில், 13 ஆயிரத்து, 220 மாணவர், 14 ஆயிரத்து 659 மாணவியர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களில், 1,490 பேரும், மாணவியரில், 811 பேரும் என, 2,301 பேரும் தேர்ச்சி பெறவில்லை.
கடந்த, 2023ல், 15 ஆயிரத்து 67 மாணவர்கள், 15 ஆயிரத்து 85 மாணவியர் என, 30 ஆயிரத்து, 152 தேர்வெழுதினர். இவர்களில், 13 ஆயிரத்து, 785 மாணவர், 14 ஆயிரத்து, 538 மாணவியர் தேர்ச்சி பெற்றனர்; மாணவர்களில், 1,282 பேரும், மாணவியரில், 547 பேரும் என, 1,829 பேர் தேர்ச்சி பெறவில்லை. இம்முறை, 2,301 பேர் தேர்ச்சி பெறவில்லை.
பிளஸ் 2 தேர்வு முடிவில், 97.45 சதவீதம் பெற்றதால், சிவகங்கை, ஈரோட்டை பின்னுக்கு தள்ளி திருப்பூர் முதலிடத்தை தட்டி துாக்கியது. ஆனால், பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், 92.38 சதவீதம் பெற்ற போதும், தென்காசி (92.69), தேனி (92.63), கடலுார் (92.63), திருவாரூர் (92.49) மாவட்டங்களுக்கு பின், 21வது இடத்தையே திருப்பூர் பெற முடிந்தது. மாவட்டத்தில், முந்தைய ஆண்டை விட அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் குறைந்ததால், திருப்பூர் பத்து இடங்கள் பின்தங்கி, 21வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
வெறிச்சோடியசி.இ.ஓ., அறை
கடந்த, 6 ம் தேதி வெளியான, பிளஸ் 2 தேர்வு முடிவில், 97.45 சதவீதம் பெற்று, திருப்பூர் மாநிலத்தில் முதலிடம் பெற்றது. முதன்மை கல்வி அலுவலக அறை வாழ்த்து மழையில் நனைந்தது. கலெக்டர் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்த போவதாக அறிவித்தார்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், 2023 ல், 11வது இடம் பெற்ற திருப்பூர், நேற்று வெளியான தேர்வு முடிவில், பத்து இடங்கள் பின்தங்கி, 21வது இடம் பெற்றது.
இதனால், தேர்ச்சி முடிவு வெளியானவுடன் சி.இ.ஓ., கீதா, மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம் 'அப்செட்'டாகினர். எதிர்பார்ப்புடன் காத்திருந்த அலுவலர்களுக்கும் அவரவர் இருக்கைக்கு சென்று விட்டனர்.
வழக்கமாக, ரிசல்ட் வந்தவுடன் கலெக்டரை சந்தித்து, ரிசல்ட் விபரங்களை தெரிவிப்பர். நேற்று அந்நடைமுறை பின்பற்றப்படவில்லை. 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சிக்கு கலெக்டர், சி.இ.ஓ., செல்ல வேண்டியிருந்ததால், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த பிற விவரங்களை முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் வழங்குவர் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.