/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இளநிலை மாணவர் சேர்க்கை நாளை 3ம் கட்ட கலந்தாய்வு
/
இளநிலை மாணவர் சேர்க்கை நாளை 3ம் கட்ட கலந்தாய்வு
ADDED : ஜூலை 24, 2024 12:45 AM
உடுமலை:உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், மூன்றாம் கட்ட கலந்தாய்வு நாளை (25ம் தேதி) நடக்கிறது.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், 14 இளநிலைப்பிரிவுகளில், 864 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மே இறுதி முதல் துவங்கியது.
முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வுகள் நிறைவடைந்து, வகுப்புகளும் துவங்கியுள்ளது. மொத்தமுள்ள, 864 இடங்களில், 809 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 55 இடங்கள் காலியாக உள்ளன.
காலியான இடங்களை நிரப்புவதற்கான, மூன்றாம் கட்ட கலந்தாய்வு, நாளை (25ம் தேதி) நடக்கிறது. இக்கலந்தாய்வில் ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்து பங்கேற்க இயலாதவர்கள், கலந்தாய்வுக்கு வந்தும் சேர்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள், புதிதாக ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.
இதுவரை ஆன்லைனில் விண்ணப்பிக்காதவர்களும், இன்று (24ம்தேதி) கல்லுாரிக்கு நேரடியாக வந்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து, நாளை (25ம்தேதி) கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றிதழ்களின் மூன்று நகல்கள், உரிய கல்வி கட்டணம், இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல் கொண்டு வருதல் வேண்டும்.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள், பெற்றோருடன் வருவது அவசியம். கூடுதல் விபரங்களுக்கு கல்லுாரி இணையதளத்தை பார்வையிடலாம்.
இத்தகவலை கல்லுாரி முதல்வர் கல்யாணி தெரிவித்தார்.