/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
1,100 கிலோ மண் குதிரையுடன் 4 கி.மீ., ஊர்வலம்; சுட்டெரிக்கும் வெயிலிலும் பக்தர்கள் பரவசம்
/
1,100 கிலோ மண் குதிரையுடன் 4 கி.மீ., ஊர்வலம்; சுட்டெரிக்கும் வெயிலிலும் பக்தர்கள் பரவசம்
1,100 கிலோ மண் குதிரையுடன் 4 கி.மீ., ஊர்வலம்; சுட்டெரிக்கும் வெயிலிலும் பக்தர்கள் பரவசம்
1,100 கிலோ மண் குதிரையுடன் 4 கி.மீ., ஊர்வலம்; சுட்டெரிக்கும் வெயிலிலும் பக்தர்கள் பரவசம்
ADDED : ஏப் 05, 2024 11:03 PM

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் கொடியேற்றத்திற்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை நாளில் சின்னக் கருணைபாளையத்திலிருந்து ஊர் மக்கள் சார்பில், அவிநாசி, மங்கலம் சாலையில் உள்ள ஆகாசராயர் கோவிலுக்கு மண் குதிரையை அலங்கரித்து தோளில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று வழிபடுவது பக்தர்கள் வழக்கம். வரும் 14ல் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் நடக்கிறது.
நேற்று சின்னக் கருணைபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து 1,100 கிலோ எடை கொண்ட மண்குதிரையை மலர்களால் அலங்கரித்து பூஜையில் செய்து சப்பரத்தில் கட்டி அப்பகுதி இளைஞர்கள் தோளில் சுமந்தபடி பெரிய கருணை பாளையம், கவுண்டம்பாளையம், காசிக்கவுண்டம்புதுார், கோவை - சேலம் பைபாஸ் சாலை வழியாக மங்கலம் சாலையை கடந்து 4கி.மீ., துாரம் ஊர்வலமாக ஆகாசராயர் கோவிலை அடைந்தனர்.
வழிநெடுகிலும் பொதுமக்கள் பக்தர்களுக்கு தண்ணீர், நீர் மோர் கொடுத்து வரவேற்றனர். பின், ஆகாசராயர் கோவிலில் குதிரையை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஆகாசராயர் மற்றும் காத்தவராயருக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோவில் வளாகத்திற்கு வெளியே காத்தவராயருக்கு கிடா வெட்டி வழிபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மண் குதிரையின் சிறப்பு
காலங்காலமாக சின்னக் கருணைபாளையத்தில் மண்குதிரையை ஊர் பொதுமக்கள் பங்களிப்பில் செய்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் மண் குதிரையை செய்து கொடுத்து வந்த உழவர் இறந்து விட்டதால் அவரது மருமகன் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே வேமாண்டபாளையத்தில் மண் குதிரை செய்யும் பணியை மேற்கொண்டார். ஒரு மாதம் இப்பணி நடந்தது.

