/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
5 போலீஸ் ஸ்டேஷன்கள் ஒரே ரோந்து வாகனம்
/
5 போலீஸ் ஸ்டேஷன்கள் ஒரே ரோந்து வாகனம்
ADDED : ஜூன் 29, 2024 01:31 AM
பல்லடம்:பல்லடம் உட்கோட்டத்தில் 5 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஒரு ரோந்து வாகனம் மட்டுமே உள்ளது.
பல்லடம் வட்டாரத்தில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. குற்ற சம்பவங்களை தடுக்க பல்லடத்துக்கு கூடுதல் போலீஸ் ஸ்டேஷன் தேவை என்ற கோரிக்கை ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல்லடம் உட்கோட்டத்தின் கீழ், பல்லடம், காமநாயக்கன்பாளையம், அவிநாசிபாளையம், மங்கலம் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உள்ளன. உட்கோட்டத்தில் உள்ள ஐந்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் சேர்த்து ஒரே ஒரு ரோந்து வாகனம் மட்டுமே உள்ளது. இந்த ஒரே ஒரு வாகனத்தை வைத்துக்கொண்டு ஐந்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் குற்ற சம்பவங்களை போலீசாரால் எவ்வாறு கண்காணித்து தடுத்து நிறுத்த முடியும்? சுழற்சி முறையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு ஸ்டேஷனுக்கும் மற்றொரு ஸ்டேஷனுக்கும் இடையே குறைந்தபட்சம், 20 கி.மீ., துாரம் உள்ளது. வாகன போக்குவரத்துக்கு இடையே இந்த துாரத்தை கடக்கவே, குறைந்தபட்சம், 25 நிமிடங்களாவது தேவை. பல்லடம் உட்கோட்டத்துக்கு, கூடுதல் ரோந்து வாகனங்கள் வழங்குவதுடன், தேவையான போலீசாரையும் நியமிக்க வேண்டும்.