/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரே நாளில் 637 மனுக்கள் ;மூச்சு முட்டிய கலெக்டர் அலுவலகம்
/
ஒரே நாளில் 637 மனுக்கள் ;மூச்சு முட்டிய கலெக்டர் அலுவலகம்
ஒரே நாளில் 637 மனுக்கள் ;மூச்சு முட்டிய கலெக்டர் அலுவலகம்
ஒரே நாளில் 637 மனுக்கள் ;மூச்சு முட்டிய கலெக்டர் அலுவலகம்
ADDED : ஜூன் 25, 2024 12:34 AM

திருப்பூர்;டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பு, தாராபுரம் சூரியநல்லுார் பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டுவந்து நேற்று மனு அளித்தனர்; மதுக்கடை அமைந்தால், போராட்டத்தில் களமிறங்குவதாக தெரிவித்தனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ஜெய்பீம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
தேர்தல் விதிமுறைகள் திரும்பப்பெறப்பட்டபின் நடத்தப்படும் இரண்டாவது குறைகேட்பு கூட்டம் என்பதால், அதிகளவில் மக்கள் மனு அளிக்க திரண்டனர். மனு அளிக்க வந்தோர், உடன் வந்தோர் என, குறைகேட்பு கூட்ட அரங்க போர்டிகோ பகுதியில், காலை முதல் மதியம் வரை நுாற்றுக்கணக்கானோர் நின்றிருந்தனர். பொதுமக்களிடமிருந்து மொத்தம் 637 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் குவிந்ததால் அதிகாரிகள் திணறித்தான் போயினர்.
இந்திய கம்யூ., கண்டியன்கோவில் கிளை செயலாளர் சின்னச்சாமி அளித்த மனு:
கண்டியன் கோவில் ஊராட்சியில் உள்ள ரோடுகள், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளன. உத்தரவாதம் அளித்து பத்து மாதங்களாகியும் இன்னும் சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை. அடுத்த 15 நாட்களுக்குள் பணிகளை துவக்காதபட்சத்தில், சாலை மறியல், முற்றுகை என அடுத்தடுத்த போராட்டங்கள் நடத்தப்படும்.
கோழிப்பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லிபாளையம் பகுதி மக்கள் அளித்த மனு:
தாராபுரம் தாலுகா, முத்தியம்பட்டி வருவாய்கிராமத்துக்கு உட்பட்ட, நல்லிபாளையம், கருப்பட்டிபாளையம் குடியிருப்பு பகுதிக்கு அருகே, மானுார் பாளையத்தில் முட்டை கோழிப்பண்ணை செயல்படுத்திவருகின்றனர். கோழிப்பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தும், அதையும் மீறி கோழிப்பண்ணை செயல்படுத்துகின்றனர்.
கோழிப்பண்ணையால் குடியிருப்பு பகுதி மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது; கோழிப்பண்ணையை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்திய கம்யூ., திருப்பூர் மூன்றாம் மண்டல குழு சார்பில் அளிக்கப்பட்ட மனு:
திருப்பூர் மாநகராட்சி 56வது வார்டு, பி.ஏ.பி., நகர், செரங்காடு தோட்டம் முதல் கிழக்கு வீதி, 2வது கிழக்கு வீதி, குறுக்கு விதிகளில் தார் ரோடு போட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. குண்டும் குழியுமாக, போக்குவரத்துக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது; புதிய தார்ரோடு போடவேண்டும்; சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும்.
இந்து மக்கள் எழுச்சி பேரவை நிறுவனர் சுதீஸ் அளித்த மனு:
திருப்பூர் - தாராபுரம் ரோடு, கோவில்வழியில் புதிய பஸ்ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுவருகிறது. குற்ற சம்பவங்கள் நடைபெறும்போது, 5 கி.மீ., துாரத்திலுள்ள நல்லுார் போலீஸ் ஸ்டேஷனை அணுகவேண்டியுள்ளது. கோவில்வழி பஸ்ஸ்டாண்டில் புறகாவல் நிலையம் அமைக்கவேண்டும்.
இவ்வாறு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன.
----