ADDED : மே 18, 2024 12:00 AM

திருப்பூர்;தொகுதிக்கு 14 வீதம், ஆறு சட்டசபை தொகுதிக்கான ஓட்டுக்களை மொத்தம் 84 டேபிள்களிலும்; தபால் ஓட்டுக்களை ஏழு டேபிள்களில் எண்ணுவதற்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளன.
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, வரும் ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது. திருப்பூர் லோக்சபா தொகுதியில், ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. அ.தி.மு.க., - இ.கம்யூ.,- பா.ஜ., - நாம்தமிழர், சுயேச்சைகள் உள்பட 13 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற தேர்தலில், மொத்தம் 11 லட்சத்து 35 ஆயிரத்து 267 ஓட்டுக்கள் பதிவாகின.
ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், எல்.ஆர்.ஜி., கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மைய ஸ்ட்ராங் ரூம்களில் சட்டபை தொகுதி வாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4ம் தேதி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டு, பதிவான ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது.
ஒவ்வொரு வேட்பாளரும், தலைமை முகவர், முகவர், தபால் ஓட்டு முகவர் என, 98 முகவர்களை நியமிக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 16 நாட்களே உள்ளன. இதையடுத்து, வேட்பாளர்கள், ஓட்டு எண்ணிக்கை முகவர் நியமன பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், ஓட்டு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். சப்-கலெக்டர் சவுமியா, டி.ஆர்.ஓ., ஜெய்பீம், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் மற்றும் ஆறு சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்; வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஓட்டு எண்ணிக்கை நாளன்று, ஓட்டுச்சாவடி முகவர்கள், காலை, 6:00 மணிக்குள் மையத்துக்குள் வந்துவிடவேண்டும். அந்தந்த தொகுதிக்கான முகவர்கள் செல்வதற்காக, தடுப்பு அமைக்கப்பட்டு, தனித்தனி வழிகள் அமைக்கப்படும்; வேறு தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை அரங்கினுள் செல்லமுடியாது.
பெண் முகவர்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளதால், மொபைல் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்படும். வழக்கமாக, சட்டசபை தொகுதிக்கு ஒன்று என்கிற அடிப்படையில், ஆறு டேபிள்களில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். இந்த லோக்சபா தேர்தலில், 7,184 தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. எனவே, ஏழு டேபிள்களில் தபால் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை, 14 டேபிளில், 24 சுற்றுக்களாக நடைபெறும். திருப்பூர் வடக்கு தொகுதியில் மட்டும், 28 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். இவ்வாறு, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

