/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
13க்கு 9 கவுன்சிலர்கள் 'ஆப்சென்ட்' ; சம்பிரதாயமாகும் ஒன்றிய கூட்டம்
/
13க்கு 9 கவுன்சிலர்கள் 'ஆப்சென்ட்' ; சம்பிரதாயமாகும் ஒன்றிய கூட்டம்
13க்கு 9 கவுன்சிலர்கள் 'ஆப்சென்ட்' ; சம்பிரதாயமாகும் ஒன்றிய கூட்டம்
13க்கு 9 கவுன்சிலர்கள் 'ஆப்சென்ட்' ; சம்பிரதாயமாகும் ஒன்றிய கூட்டம்
ADDED : ஆக 14, 2024 09:19 PM

உடுமலை : குடிமங்கலம் ஒன்றியக்குழு கூட்டத்தில், பெரும்பாலான கவுன்சிலர்கள் பங்கேற்பதில்லை; மக்கள் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்காததால், சம்பிரதாயமாக இக்கூட்டம் மாறி வருகிறது.
குடிமங்கலம் ஒன்றியக்குழு கூட்டம், அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு துணைத்தலைவர் புஷ்பராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், தி.மு.க., வைச்சேர்ந்த கவுன்சிலர்கள் ராஜமாணிக்கம், முருகானந்தம், திவ்யா மற்றும் அ.தி.மு.க., வைச்சேர்ந்த முருகன் ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர்.
மொத்தமுள்ள, 13 ஒன்றியக்குழு உறுப்பினர்களில், ஒன்றியக்குழு தலைவர் சுகந்தி உள்ளிட்ட 9 கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. இதனால், ஒன்றியக்குழு கூட்டம் பெயரளவுக்கு நடந்தது.
குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளில், மக்களுக்கான பல்வேறு அடிப்படை பிரச்னைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
குறிப்பாக, குடிநீர் மற்றும் சுகாதார சீர்கேடுகளால், பல கிராம மக்கள் பாதித்து வருகின்றனர். இப்பிரச்னைகள் குறித்து விவாதித்து, நடவடிக்கை எடுக்கவே, ஒன்றியக்குழு கூட்டத்துக்கு அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் வரவழைக்கப்படுகின்றனர்.
ஆனால், தங்களை தேர்வு செய்த கிராம மக்களின் பிரச்னைகள் குறித்து பேச, பெரும்பாலான ஒன்றிய கவுன்சிலர்கள், கூட்டத்துக்கு வருவதில்லை.
இதனால், கிராமங்களின் பிரச்னைகளை விவாதிக்கவோ, அதற்கான தீர்வு பெறவோ நடத்தப்படும் கூட்டம், வெறும் சம்பிரதாய கூட்டமாக மாறி விட்டது.
சில கவுன்சிலர்கள் கூட்டம் நடந்த பிறகு வந்து, கையெழுத்து போட்டுச்செல்லும் பழக்கத்தையும் பின்பற்றி வருகின்றனர். இந்த நடைமுறை, கடந்த சில ஆண்டுகளாக தொடர்கதையாகியுள்ளது.
விரைவில், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் நிறைவு பெற உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், வரும் உள்ளாட்சி தேர்தலில், தற்போது பதவியிலுள்ள கவுன்சிலர்கள் மீண்டும் மக்களை சந்திப்பது சவாலானதாக மாறி விடும்.
குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக தவித்து வரும் நிலையில், ஒன்றிய குழு கூட்டத்துக்கு கூட முறையாக செல்லாதவர்களை தேர்வு செய்தது வேதனையளிக்கிறது என, குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட கிராம மக்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்க துவங்கியுள்ளனர்.