/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விரைவில் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்
/
விரைவில் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்
ADDED : மே 09, 2024 05:05 AM

திருப்பூர் :''வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதும், புதிய ஆர்டர் வரத்து அதிகரிக்கும்; அவற்றை எதிர்கொள்ள திருப்பூர் தயாராக வேண்டும்,'' என, ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் பேசினார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு மண்டல உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்தது. சங்க நிறுவன தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். சங்க தலைவர் சுப்பிரமணியன், பொது செயலாளர் திருக்குமரன், துணை தலைவர் இளங்கோவன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் பேசியதாவது:
ஐரோப்பா மற்றும் பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில், புதிய ஆர்டர்கள் வர வாய்ப்புள்ளது; அவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். திருப்பூரில் ஆர்டர் குறைந்துவிட்டது என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். துணிகழிவுகளை குறைத்தல், மறுசுழற்சி செய்வதை ஆவணப்படுத்துவது தொடர்பாக சுவிட்சர்லாந்து புளூசைன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
மத்திய அரசு, 1,100 ஏக்கரில், விருதுநகரில் 'பி.எம்., -மித்ரா' பார்க் அமைக்கிறது. அதை பயன்படுத்தி தொழிலை மேம்படுத்தவும் ஏற்றுமதியாளர்கள் தயாராக இருக்க வேண்டும். அரசு மானிய உதவியுடன் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து தேர்ந்தெடுக்கலாம்.
உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட மானிய திட்டத்தில், ஊக்கத்தொகை வழங்குவது, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி தொடர்பாகவும் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு, அவர் பேசினார்.
உற்பத்தி செலவு
துணை தலைவர் ராஜ்குமார் பேசுகையில்,''ஆர்டர்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை எதிர்கொள்ள, அனைத்து நிலையிலும் திருப்பூர் தயாராக வேண்டும். உற்பத்தி கட்டமைப்புகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். உற்பத்தி செலவை குறைக்கவும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். துணி கழிவு உருவாகுவதை கட்டுப்படுத்த வேண்டும்,'' என்றார்.
முனன்தாக, இணை செயலாளர் குமார் துரைசாமி, உறுப்பினர் சேர்க்கை துணை குழுவின் தலைவர் சிவசுப்பிரமணியம், துணை தலைவர் ரத்தினசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
------------------
பட விளக்கம்
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்த கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு மண்டல உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்.