ADDED : ஆக 07, 2024 11:02 PM
உடுமலை : மடத்துக்குளத்தில், கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் அடிக்கடி உடைந்து, தேசிய நெடுஞ்சாலை தடுப்பணையாக மாறும் பிரச்னை நீண்ட காலமாக நீடித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அமைந்துள்ளது. நெடுஞ்சாலையை ஒட்டி, தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட் ஆகியவை வரிசையாக அமைந்துள்ளன.
மேலும், தற்காலிக ஆக்கிரமிப்புகளால், அமராவதி ஆற்றுப்பாலம் வரை, நெடுஞ்சாலை குறுகலாகவே உள்ளது. இந்நிலையில், மடத்துக்குளம் நால்ரோடு அருகே, கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் அடிக்கடி உடைகிறது.
திருமூர்த்திமலை மற்றும் ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் செல்லும் பிரதான குழாய், தேசிய நெடுஞ்சாலை ஒட்டி அமைந்துள்ளது. அடிக்கடி குழாய் உடைவதால், பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. மேலும், வெளியேறும் குடிநீர், தேசிய நெடுஞ்சாலையில், தேங்கி, அப்பகுதி குளம் போல் மாறி விடுகிறது.
நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, குடிநீர் வடிகால் வாரியத்தினர், பிரதான குழாயை மாற்றியமைக்க வேண்டும். அடிக்கடி உடைப்பு ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மடத்துக்குளம் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.