/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பிளஸ் 2 முடித்தவர் கல்லுாரியில் சேர வேண்டும்'
/
'பிளஸ் 2 முடித்தவர் கல்லுாரியில் சேர வேண்டும்'
ADDED : மே 11, 2024 12:07 AM

திருப்பூர்;பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் கல்லுாரி படிப்பை மேற்கொள்ள வேண்டும், என கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்லுாரி படிப்புகள் குறித்து வழிகாட்டும் வகையில், 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி நேற்று திருப்பூர், அங்கேரிபாளையம் ரோடு, கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்நிகழ்ச்சி திருப்பூர் வடக்கு, அவிநாசி மற்றும் ஊத்துக்குளி வட்டார வள மையம் சார்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் நடந்தது.
இதையொட்டி பல்வேறு பகுதி கல்லுாரிகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு, படிப்புகள், சேர்க்கை விவரங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு ஆகியோர் பேசினர். முதன்மை கல்வி அலுவலர் கீதா, திறன் பயிற்சி உதவி இயக்குநர் ஜெயகுமார், முன்னோடி வங்கி மேலாளர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், கலெக்டர் பேசியதாவது:பொதுத்தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் கல்லுாரி படிப்பை மேற்கொள்ள வேண்டும். அதற்கு வழிகாட்டும் விதமாகவும், வேலை வாய்ப்பு மற்றும் சுய தொழில் முனைவோர் என மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்நிகழ்ச்சி பல்வேறு நிபுணர்கள் வாயிலாக நடத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 23,242 பேர் பொது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளோம். அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்பதில், சந்தேகமில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.