/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொளுத்தும் வெயிலில் இளைப்பாற ஒரு குளக்கரை
/
கொளுத்தும் வெயிலில் இளைப்பாற ஒரு குளக்கரை
ADDED : மே 01, 2024 12:50 AM

திருப்பூர்;கொளுத்தும் வெயிலுக்கு 'குளுகுளு' என இளைப்பாறும் வகையில், சாமளாபுரம் குளக்கரை அமைந்துள்ளது.
திருப்பூர் மாவட்ட எல்லையான, சாமளாபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள சாமளாபுரம் குளம், 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நொய்யல் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர், ஆண்டு முழுவதும் குளத்தில் தேக்கி வைக்கப்படுகிறது.
சாமளாபுரம் குளம், களிமண் பூமி என்பதால், ஆண்டு முழுவதும் குளத்தில் தண்ணீர் இருக்கும். தற்போது சுட்டெரிக்கும் கோடையிலும், அப்பகுதி, பயணிகள் இடையே இளைப்பாறி செல்லும் குளிர்ச்சி நிறைந்த பகுதியாக பராமரிக்கப்படுகிறது.
சாமளாபுரம் குளம் பாதுகாப்பு மற்றும் பசுமை அமைப்புகள் குளக்கரையில், மரக்கன்று நட்டு வளர்த்தனர். அடர்த்தியாக வளர்ந்துள்ள வாகை மரங்கள், எத்தகைய வெயிலாக இருந்தாலும், குளிர்ச்சியான நிழல் கொடுக்கின்றன.
மரத்தடியில், கரும்பு ஜூஸ், நுங்கு, கம்பங்கூழ் என, வெயிலுக்கு இதமான உணவு வகைகளும் விற்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, பயணிகள் இடையே இளைப்பாறி செல்ல வசதியாக, குளக்கரையின் ரோட்டுக்கு வடபுறம், சிறிய அளவிலான திண்ணைகளும் அமைத்துள்ளன.
'டூவீலர்'களில் வேகமாக சென்று வருவோரும், தென்புறம் கண்ணுக்கு குளிர்ச்சியான தண்ணீர்; வடபுறம் குளிர்ச்சியான நிழல் கொடுக்கும் மரங்களுக்கு இடையே சிறிய திண்ணைகள், சிறிது நேரம் இளைப்பாறி செல்ல துாண்டுகின்றன.
தொலை துாரங்களில் இருந்து காரில் வருவோரும், சிறிது நேரம் நிழலில் இளைப்பாறிவிட்டு, உற்சாகமாக புறப்பட்டு செல்கின்றனர். துாய்மையான காற்றை சுவாசித்து, கண்ணுக்கு குளிர்ச்சியான குளம், குளத்திற்குள் இருக்கும் இரண்டு தீவு போன்ற திட்டுகளில் உல்லாசமாக சுற்றிக்கொண்டிருக்கும் பறவைகளை கண்டு களிக்கலாம். தொழில் வளர்ச்சி பெற்றாலும் கூட, சாமளாபுரம் குளம் போன்ற பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தற்போதே, சாமளாபுரம் குளக்கரை, பயணிகள் இளைப்பாறி செல்லும் இடமாக மாறிவிட்டது. இனியாவது, சுற்றுலாத்துறை மூலமாக, குளத்தில் படகுசவாரி, சிறிய பூங்கா போன்ற பொழுதுபோக்கு வசதிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். அவ்வாறு, பொழுதுபோக்கு தலமாக தரம் உயர்த்தினால், ரோட்டோரமாக நின்று ரசிக்காமல், தீவுத்திட்டுகளை படகில் சுற்றி வந்தும்,ரம்மியமான குளத்தைகண் குளிர ரசிக்கலாம்!