/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடியிருப்புகளில் 'மூன்றாவது கண்' முக்கியம்
/
குடியிருப்புகளில் 'மூன்றாவது கண்' முக்கியம்
ADDED : ஜூன் 26, 2024 10:53 PM
திருப்பூர் : 'பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க, 'சிசிடிவி' கேமராக்கள் பேருதவி புரிந்து வரும் நிலையில், குடியிருப்பு பகுதிகளில் அவற்றை அத்தியாவசியமாக்க வேண்டும்' என, போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.
திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு, பிக்பாக்கெட், பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில், வீடுகளின் பூட்டை உடைத்து திருடுவது, வீடுகள் அல்லது பொது இடங்களில் நிறுத்தி வைத்துள்ள டூவீலர்களை திருடிச் செல்வது, ரோடுகளில் நடந்து செல்வோரிடம் இருந்து மொபைல் போன்களை பறிப்பது என, பல்வேறு குற்றச்செயல்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.
போலீசுக்கு சவால்
இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிப்பது, போலீசாருக்கு சவால் நிறைந்ததாக உள்ளது. தொடர் புலன் விசாரணை அடிப்படையில், போலீசார் குற்றவாளிகளை பிடிக்கின்றனர். ஆரம்ப கால கட்டங்களில், இதுபோன்ற குற்றச்செயல்கள் நடந்தால், அப்பகுதியில் உள்ள பழைய குற்றவாளிகளின் பட்டியலை புரட்டி பார்த்து, சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை பிடித்து விசாரிப்பர்.
பின், தொழில்நுட்பம் வளர, வளர, மொபைல்போன் 'டவர்' உதவியுடன், குற்றவாளிகளை மடக்கி பிடிக்கின்றனர். இருப்பினும், சில வழக்குகளில் தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பது, போலீசாருக்கு கடினமானதாக உள்ளது. தற்போது, 'சிசிடிவி' கேமராக்கள் பல இடங்களில் பொருத்தப்படுவதன் வாயிலாக, பல்வேறு புகாரில் தொடர்புடையவர்கள் தப்பியோடினாலும், போலீசாரிடம் கையும் களவு மாக சிக்குகின்றனர்.
'சிசிடிவி' கேமரா
போலீசார் கூறியதாவது:
குடியிருப்பு பகுதிகள், பொது இடங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் புதிய நபர்களின் நடமாட்டம் இருப்பதும், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதும், மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் மற்றும் அசாதாரண நிலையை ஏற்படுத்துகிறது.
குடியிருப்பு பகுதிகள், 'அபார்ட்மென்ட்' உள்ளிட்ட இடங்களில் 'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டும் என்ற காவல்துறையின் அறிவுறுத்தலை ஏற்று, பலரும் கேமரா பொருத்தி வருகின்றனர். நெடுஞ்சாலைகளிலும், கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீசாரின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
குற்றச்செயல்களில் ஈடுபட்டு தப்பியோடுவோர், ஏதாவது ஒரு 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி விடுகின்றனர். அவர்களை பிடிப்பது எளிதாகிறது. போலீசாரின் புலன் விசாரணைக்கு 'சிசிடிவி' கேமராக்கள் மூளையாக மாறியுள்ளன.
குற்றச்செயல்கள் நிகழாமல் தடுப்பதில் கூட, 'சிசிடிவி' கேமராக்களின் பங்களிப்பு அதிகம். ஒவ்வொரு வீதிகளிலும் தெருவிளக்கு, குடிநீர் குழாய் இணைப்பு உள்ளிட்டவை எந்தளவு முக்கியமோ, அதே முக்கியத்துவத்தை 'சிசிடிவி' கேமரா பொருத்துவதிலும் வழங்கும் பட்சத்தில், குற்றச்செயல்களை வெகுவாக கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.