/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரமிக்க வைக்கும் புதிய தொழில்நுட்பங்கள் 'நிட் ஷோ' கண்காட்சியில் அறிந்துகொள்ள ஆயிரம் விஷயங்கள்
/
பிரமிக்க வைக்கும் புதிய தொழில்நுட்பங்கள் 'நிட் ஷோ' கண்காட்சியில் அறிந்துகொள்ள ஆயிரம் விஷயங்கள்
பிரமிக்க வைக்கும் புதிய தொழில்நுட்பங்கள் 'நிட் ஷோ' கண்காட்சியில் அறிந்துகொள்ள ஆயிரம் விஷயங்கள்
பிரமிக்க வைக்கும் புதிய தொழில்நுட்பங்கள் 'நிட் ஷோ' கண்காட்சியில் அறிந்துகொள்ள ஆயிரம் விஷயங்கள்
UPDATED : ஆக 11, 2024 01:37 AM
ADDED : ஆக 11, 2024 01:17 AM

திருப்பூர்;ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள்... பிரமாண்ட இயந்திரங்கள்... எக்கச்சக்கமான 'அக்சசரீஸ்'... கம்ப்யூட்டர் சாப்ட்வேர் என, 'நிட் ஷோ -2024' பின்னலாடை தொழில்நுட்ப கண்காட்சி களைகட்டியுள்ளது.
நிட்டிங், பிரின்டிங், எம்ப்ராய்டரிங் என, பல்துறை சார்ந்த இயந்திரங்களில், அதிநவீனமும், புதிய அம்சங்களும் புகுத்தப்பட்டுள்ளன.
அதிவேகமாக இயங்கி, அசத்தலான உற்பத்தியை கொடுக்கும் நிட்டிங் இயந்திரங்கள், பார்ப்பதற்கு பிரின்டட் போட்டோ போல காட்சியளிக்கும் பிரமிக்க வைக்கும் டிஜிட்டல் பிரின்டிங், தத்ரூபமான எம்ப்ராய்டரிங், 'டேக்,' ஜிப், பட்டன், ரோப், ஆடைகளை பேக்கிங் செய்வதற்கான வண்ணமயமான 'பாலிபேக்' என, பின்னலாடைத் தொழிலுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் கொட்டிக்கிடப்பதால், தொழில்துறையினர் ஆர்வம் மேலிட கண்காட்சி அரங்குகளைச் சூழ்ந்துள்ளனர்.
குறைவான தொழிலாளர் மூலம் நிறைவான உற்பத்தியை தொடர செய்யும் தானியங்கி இயந்திரங்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறியுள்ள பிரின்டிங் மெஷின்கள் தொடர்பான வர்த்தக விசாரணை அனல் பறக்கிறது.
'எம்போசிங்' பிரின்டிங்
மதிப்பு கூட்டப்பட்ட ஆயத்த ஆடை தயாரிப்பில், 'எம்போசிங்' என்பது அத்தியாவசியமாகிவிட்டது. அதாவது, எவ்வித பொருட்களும் இல்லாமல், அதே துணியில் எழுத்துகள் போல் பிரின்ட் செய்யும் 'எம்போசிங்' பிரின்டிங் ரகங்களை, பார்வையாளர் பிரமித்து பார்க்கின்றனர்.'இம்பெக்ஸ்' ரகங்கள்
ஆயத்த ஆடைகளில், 'டி-சர்ட்' மற்றும் பேன்ட்களில், கண்ணை கவரும் வகையில், முத்திரைகளை பதிக்கும், 'இம்பெக்ஸ்' ஏராளமாக உள்ளன. அதாவது, அழகிய ரப்பர் போன்ற அவற்றை, துணியின் மீது வைத்து, அழுத்தமான மெஷினில் தேய்த்தால், அது அப்படியே, துணியின் மீது பிரின்ட் செய்தது போல் ஒட்டிக்கொள்கிறது.
'பிக்' கண்ணாடி
துணியில் உள்ள நுாலின் தரத்தை அறிய, 'பிக்' கண்ணாடி பயன்படுத்தப்படுகிறது.நெய்த துணிகளில், நுாலின் எண்ணிக்கையை எண்ணி சரிபார்ப்பது போல், பின்னல் துணியிலும், 'பிக்' கண்ணாடி மூலமாக, நுாலிழைகளின் தரத்தையும், பின்னல் முறைகளையும் அறியும் வகையில், 'பிக்' கண்ணாடி போன்ற ஆய்வு கருவிகளும் கண்காட்சியில் உள்ளன.
'சஸ்டெய்னபிலிட்டி' பொருட்கள்
முற்றிலும் பசுமை சார் உற்பத்தி முறையில் தயாரிக்கப்பட்ட, வீட்டு உபயோக மற்றும் சமையலறை உபயோக ஜவுளி பொருட்கள், ஸ்டால்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சமையல் அறைக்கு இவ்வளவு ஜவுளி பொருட்களா என, அதிசயமாக, அனைவரும் விசாரித்து வருகின்றனர்.
இயற்கைச் சாயம்
சிறிய கண்ணாடி பாட்டில்களில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தயாரிக்கப்பட்ட, டிஜிட்டல் பிரின்டிங் 'இங்க்' வகைகள் கண்ணை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.
கண்ணைக்கவரும் 'பாலிபேக்' இதுவரை நடந்த கண்காட்சிகளில் இல்லாத வகையில், கண்ணை கவரும் 'பாலிபேக்' கவர்களும் இடம்பெற்றுள்ளன. சாதாரண பாலிதீன் காகிதத்தில் பேக்கிங் செய்த நிலை மாறிவிட்டது. உள்ளாடைகள் மற்றும் 'டி-சர்ட்' தயாரிப்பு முறை தொடர்பான விவரங்கள் மற்றும் படங்கள் பிரின்ட் செய்யப்பட்ட, 'பாலிபேக்'குகள், வாடிக்கையாளரை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரின்டிங் படக்காட்சி
'டிஜிட்டல்' பிரின்டிங் வந்த பிறகு, மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தி மெருகேறியுள்ளது. ஒவ்வொரு படத்தையும், அச்சு பிசிறாமல், பனியன் ஆடைகளில் பிரின்ட் செய்யப்படுகின்றன. அதுபோன்ற அதிசயத்தக்க வகையிலான படங்கள் பிரேம் செய்து, கண்காட்சியில் படக்காட்சியை போல் வைக்கப்பட்டுள்ளன.
சோலார் அரங்குகள்
கண்காட்சி வளாகத்தில், வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு அமைக்கும் சோலார் பேனல் மற்றும் உபகரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பிரபல சோலார் விற்பனை நிறுவனங்கள் ஸ்டால் அமைத்து, வாடிக்கையாளர்களுக்கு, அரசு மானியத்துடன் சோலார் அமைக்கும் வழிமுறைகளை விளக்கி வருகின்றன.
'நிட்டிங்' இயந்திரங்களில் பயன்படுத்தும் உதிரி பாகங்களின் தேவை திருப்பூரில் அதிகம். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில், 'நிட்டிங்' மற்றும் பிரின்டிங் உதிரி பாகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
ஆடைகளில் வைக்கப்படும் 'லேபிள்' வகைகள், பேக்கிங் அட்டை பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படும், உற்பத்தி நிறுவனத்தின் பெயர் அச்சிடப்பட்ட 'எலாஸ்டிக் டேப்' வகைகள், ஸ்டிக்கர் வகைகள் அசத்தலாக வைக்கப்பட்டுள்ளன.
மறுசுழற்சி நுால்
ஏற்றுமதி வர்த்தகத்தில், மறுசுழற்சி தொழில்நுட்பம் கட்டாயமாகிவிட்டது. ஏற்றுமதியாளருக்காக, மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட நுாலிழைகள், அவற்றில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட 'பேப்ரிக்' ரகங்கள் மற்றும் ஆயத்த ஆடைகள், ஒரே அரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக, மறுசுழற்சி தொழில்நுட்பம் திருப்பூரில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்துக்கும் சென்றடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆட்களே இல்லாமல், தானியங்கி முறையில், எலாஸ்டிக் ரோலில் இருந்து, தனியே 'கட்' செய்து, தன்னிச்சையாக இணைத்து கொடுக்கும் இயந்திரங்கள்; நவீன முறையில், 'டி-சர்ட்'களை அயர்னிங் செய்யும் இயந்திரங்கள்; பனியன் துணியை, நீண்ட கயிறு போல் 'கட்' செய்யும் இயந்திரங்கள்; ஆயத்த ஆடைகளில் ஒட்டி, மதிப்புகூட்ட செய்யும் ஸ்டிக்கர் வகைகள் என, ஏராளமான அம்சங்கள், ஒவ்வொரு ஸ்டால்களிலும் குவிந்துள்ளன.
தொழில் முனைவோர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர், மெஷின் ஆபரேட்டர் என, அனைத்து நிலை பணியாளரும், 'நிட்ேஷா' கண்காட்சியை சுற்றிப்பார்த்தால், புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்து பின்பற்ற முடியும்.
---
'நிட்ஷோ' கண்காட்சியில் இடம்பெற்றுள்ள, மறு சுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் டி-சர்ட்;
துணிகளின் நுால் அளவை பார்க்க உதவும் லென்ஸ் ஸ்டால்.
மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள்.
விதவிதமான அயர்ன் பாக்ஸ்.
'எம்போஸிங்' முறையிலான பிரின்டிங்
பிரின்டிங் 'இங்க்' வகைகள்
பட்டன் வகைகள்