/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆதார்' சிறப்பு முகாம் மக்கள் அலைக்கழிப்பு
/
'ஆதார்' சிறப்பு முகாம் மக்கள் அலைக்கழிப்பு
ADDED : ஜூலை 08, 2024 12:06 AM

அவிநாசி:பள்ளி மாணவர்களின் வசதிக்காக ஆதார் மையங்களில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு தாலுகாவிலும் சுழற்சி முறையில் முகாம்கள் செயல்படுத்தப்படுகிறது. நேற்று அவிநாசி தாலுகா அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் அவிநாசி தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் குவிந்தனர். ஆனால், ஒரே நபரை மட்டும் வைத்து ஒரு கணினியில் மட்டுமே ஆதார் திருத்தங்கள், புதிய ஆதார் பதிவுகள் பதிவேற்றப்பட்டது.
இ-சேவை மையத்தில் வார நாட்களில் 50 டோக்கன்கள் வழங்கப்படும்.
நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 100 டோக்கன்கள் வழங்கப்பட்டன. பலரும் டோக்கன் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
காலை முதல் மாலை வரை காத்திருந்தும் ஆதார் எடுக்க முடியாமல் பலரும் திரும்பினார்.
நல்லது நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ரவிக்குமார் கூறுகையில், ''டோக்கன்களை பெறுவதற்கான கால நேரம் அறிவிக்கப்படவில்லை. ஒரு ஊழியர் மட்டுமே ஒரு கணினியை மட்டும் வைத்து ஆதார் பதிவேற்றம் செய்ததால் ஒவ்வொரு பதிவிற்கும் நீண்ட நேரம் ஆனது'' என்றார்.
அவிநாசி பா.ஜ. நகர தலைவர் தினேஷ்குமார் கூறுகையில், ''ஐந்து நபர்களுக்கு ஆதார் பதிவு செய்ய, சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நேரம் ஆனது. தாசில்தார் மோகனனிடம் தெரிவித்தோம். அவரோ ஒரு கணினி மட்டுமே உள்ளது. அதை வைத்துதான் நடத்த வேண்டும் என்று கூறினார்'' என்றார்.
''டோக்கன்கள் கொடுக்கும் கால நேரத்தை முன்கூட்டியே அறிவித்து குறைந்தபட்சம் 3 நபர்களை பணியில் அமர்த்தி ஆதார் பதிவுகளை செய்ய வேண்டும்; மாதம் இருமுறை முகாம் நடத்த வேண்டும்'' என்கின்றனர் பொதுமக்கள்.-