/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடி அமாவாசை: முன்னோருக்கு தர்ப்பணம்
/
ஆடி அமாவாசை: முன்னோருக்கு தர்ப்பணம்
ADDED : ஆக 04, 2024 11:33 PM

திருப்பூர் : ஆடி அமாவாசையான நேற்று, மறைந்த முன்னோர்களுக்கு, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
அமாவாசை தோறும், இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நடைமுறை உள்ளது. இயலாதவர்கள், மகாளயபட்ச அமாவாசை, ஆடி மற்றும் தை ஆகிய மூன்று அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும், ஆடி அமாவாசை நாளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம். அதன்படி, ஆண்கள் தங்கள் குடும்பத்தை சேர்ந்த, மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
திருப்பூர், பார்க் ரோடு ராகவேந்திரா கோவில், கே.எஸ்.சி., பள்ளி வீதி விநாயகர் கோவில், திருமுருகன்பூண்டி கோவில் உள்ளிட்ட பகுதிகளில், பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர். பச்சரிசி, பச்சை காய்கறிகள், எள் மற்றும் தண்ணீர் படைத்து வழிபட்டனர். தொடர்ந்து, குடை, காலணிகள், ஆடைகளை தானமாக வழங்கினர்.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள தர்ப்பண கூடத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் குவிந்தனர். மங்கலம் ரோட்டில் உள்ள பழமையான சுப்பையா சுவாமி மடத்தில் தர்ப்பணம் கொடுக்க, சாய் குருக்ருபா சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள், வீடுகளில் வடை, பாயசம் போன்ற பதார்த்தங்களை தயாரித்து, படையலிட்டு, முன்னோர் வழிபாட்டை நடத்தினர்.
தங்கள் முன்னோரின் படங்களுக்கு மாலை அணிவித்து, புதிய சேலை மற்றும் வேட்டி ஆகியவை வைத்தும் வழிபட்டனர். படையலை காகத்துக்கு வைத்தனர்.