/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதிமீறல் கட்டடங்கள் மீது பாயவில்லை நடவடிக்கை
/
விதிமீறல் கட்டடங்கள் மீது பாயவில்லை நடவடிக்கை
ADDED : ஆக 08, 2024 12:06 AM
பல்லடம்: பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 1,200க்கும் அதிகமான வணிக கட்டடங்கள், 500க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன. ஆண்டுக்கு, 3 கோடி ரூபாய்க்கு மேல் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது.
பின்னலாடை தொழில் சார்ந்த தொழில் நிறுவனங்கள் பலவும், பல்லடம் பகுதியிலும் விரிவடைந்து வருகின்றன. பல்லடம் நகரப் பகுதியிலும் நாளுக்கு நாள் மக்கள் தொகை, வாகன போக்குவரத்து உள்ளிட்டவை அதிகரித்து வருகின்றன. நகராட்சி எல்லையில் கட்டப்படும் கட்டடங்களில் பெரும்பாலானவை கட்டட விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.
கட்டட விதிமுறைப்படி, 2 ஆயிரம் சதுர அடிக்குள் இருந்தால், நகராட்சியிடமும், இதற்கு மேல் இருந்தால், 'டி.டி.சி.பி., எனப்படும் நகர ஊரமைப்பு இயக்ககத்திடமும் அனுமதி பெற வேண்டும். ஆனால், 2 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கட்டடங்கள், நகராட்சி பகுதியில் ஏராளமாக உருவாகி வருகின்றன. கட்டட விதிமுறைப்படி, ஜன்னல், கதவுகள், படிக்கட்டு, அவசர வழி, கழிப்பிடம், பார்க்கிங் உள்ளிட்ட எதுவும் அமைக்கப்படுவதில்லை. விதிமீறல் கட்டடங்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது நகராட்சியின் பணி. ஆனால், நகராட்சி கண்டுகொள்ளாததால், புதிது புதிதாக கட்டடங்கள் உருவாகி வருகின்றன. பின்னாளில், கட்டடம் கட்டியவர்கள் பாதிக்கப்படுவதுடன், உரிய தீர்வு காண முடியாத நிலை ஏற்படும்.