/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கடைமடை வரை தண்ணீர் கிடைக்க நடவடிக்கை தேவை'
/
'கடைமடை வரை தண்ணீர் கிடைக்க நடவடிக்கை தேவை'
ADDED : மார் 01, 2025 06:27 AM
திருப்பூர்; அமராவதி அணையில் தற்போது, 57 அடிக்கு மட்டுமே நீர் மட்டம் உள்ளது. பழைய, புதிய ஆயக்கட்டு பகுதியில் நெல் அறுவடை நடைபெறுகிறது.
நெல் விவசாயிகள் பாதிப்பு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து பேசியதாவது:
அடுத்த மூன்று மாதம் கோடை காலம் என்பதால், குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கக்கூடாது. தாராபுரத்தில் அமராவதி பழைய ராஜ வாய்க்காலில் இந்தாண்டுக்கான துார்வாரும் பணியை பொதுப்பணித்துறை சரிவர மேற்கொள்ளவில்லை.
கடைமடைக்கு தண்ணீர் வந்துசேராததால், 1,500 ஏக்கர் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் காலங்களில் பாசன சபை தலைவர்களுக்கு நிதி ஒதுக்கி, சரியான முறையில் மண் கால்வாய்களை துார்வாரி, கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். தாராபுரம் நகரில் ராஜவாய்க்கால் ஐந்து கி.மீ., துாரம் பயணிக்கிறது.
நகர கழிவுகள், மருத்துவ கழிவுகள் ராஜவாய்க்காலில் கலக்கிறது. இந்த நீரை பயன்படுத்தும் கால்நடைகள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தாராபுரம் நகரிலிருந்து வெளியேறும் கழிவுநீரை, சுத்திகரித்து விவசாய பயன்பாட்டுக்கு விடவேண்டும்.
கோடைக்காலத்தில் ஆழ்குழாய் கிணறுகளை பயன்படுத்தியே விவசாயம் செய்யவேண்டியுள்ளது. எனவே விவசாய இணைப்புகளுக்கு தட்டுப்பாடும் இன்றி மும்முனை மின்சாரம் வழங்கவேண்டும். தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே பயன்படுத்தி வந்த விவசாயிகளுக்கு வழங்கிய காலியிடம், தனி அறை ஒதுக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கிய காலி இடம், தனி அறையை மாவட்ட நிர்வாகம் பெற்றுத்தர வேண்டும்.