/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண்கள் தான் படைப்பு கடவுள்:நடிகர் சிவகுமார்
/
பெண்கள் தான் படைப்பு கடவுள்:நடிகர் சிவகுமார்
ADDED : செப் 01, 2024 01:51 AM

பல்லடம்;-''பத்து மாதம் குழந்தையை பெற்றெடுக்கும் ஒவ்வொரு பெண்ணும் படைப்பு கடவுள் தான்,'' என, பல்லடத்தில் நடந்த மனைவி நல வேட்பு நாள் சிறப்பு கருத்தரங்கில், நடிகர் சிவகுமார் பேசினார்.
பல்லடம் 'வனம்' அமைப்பின் சார்பில், வனாலயத்தில், 'வேதாத்திரிய வாழ்க்கை நெறி 'எனும், மனைவி நல வேட்பு நாள் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. வனம் அமைப்பின் செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார். தலைவர் சுவாதி கண்ணன், செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் சிவகுமார் பேசியதாவது:
எனது 17 வயதில் யோகா செய்ய துவங்கினேன். எனது நாக்கில் காபி, டீ பட்டு, 68 ஆண்டுகள் ஆகிறது. கண் மூடினால் மனம் கெடக்கூடாது. இது நானாக உருவாக்கி கொண்ட வாழ்க்கை. அதுதான் தியானம். உடம்பும் மனமும் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இல்லையெனில் வாழ்வது வீண்.
இந்த மண்ணில் பிறந்த தற்கும், என்னை பெற்ற தாய்க்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களைப் பட்ட வேதாத்திரி மகரிஷி மண்சோறு சாப்பிட்டு வாழ்ந்துள்ளார். திருப்பூரில் நடந்த மனைவி நலவேட்பு நாள் விழாவில் தான், பேச்சாளராக மாறினேன்.
உயிர், உடல் கொடுத்து, தாய் தந்தையரின் ஞானத்தை எல்லாம் குழந்தைக்குள் வைத்து, 10 மாதம் சிரமப்பட்டு, குழந்தையை பெற்று எடுப்பவர்கள்தான் பெண்கள். இப்படிப்பட்ட பெண்கள் ஒவ்வொருவரும் படைப்பு கடவுள் ஆவார்கள்.
திருக்குறள் உங்களுக்கு மட்டுமின்றி, நமது எதிர்கால தலைமுறைகளாக உள்ள குழந்தைகளுக்கும் பயன்படும். காந்தி, காமராஜர் உள்ளிட்ட அனைவரது வாழ்க்கையிலும் நடந்த சம்பவங்களில், திருக்குறள் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.