/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வல்லாரை கீரை வளர்க்கலாம்: விவசாயிகளுக்கு அறிவுரை
/
வல்லாரை கீரை வளர்க்கலாம்: விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : மே 03, 2024 11:10 PM
உடுமலை:அங்கக தன்மையுள்ள களிமண்ணில், வல்லாரை சாகுபடி மேற்கொள்ளலாம் என, அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கோவை வேளாண் பல்கலை., வாயிலாக, மூலிகை பயிர்கள் சாகுபடிக்கு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. அவ்வகையில், வல்லாரை கீரையானது, ஈரப்பதமான மற்றும் சதுப்பு நிலம் மற்றும் நீர் நிலைகளைச்சுற்றி வளரும்.
அமில மண் மற்றும் உவர் மண்ணில் வளரும். ஈரத்தன்மையுள்ள, அங்ககத்தன்மை கொண்ட களிமண்ணிலும் நன்கு வளரும். மிதமான காலநிலையில் நல்ல வளர்ச்சி இருக்கும்.
நிழலான பகுதிகளில் நன்கு வளரும். ஐம்பது சதவீத நிழலில் மூலிகை அதிகமாக வளரும் மற்றும் மகசூல் அதிகமாக கிடைக்கும். நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். பின்பு போதுமான அளவு படுக்கைகளை அமைக்க வேண்டும்.
வேர் நன்கு பிடிக்க சிறிதளவு பாசனம் ஒன்று முதல் இரண்டு நாட்களுக்கு அளிக்க வேண்டும். நிலம் தயாரிக்கும்போது, தொழு உரம் ெஹக்டேருக்கு, 5 டன் அடியுரமாக அளிக்க வேண்டும்.
குறைந்த அளவு பாசனம், 4-6 நாட்கள் இடைவெளியில் பயிர் நன்கு வளரும் வரை அளிக்க வேண்டும். பிறகு பயிரின் தேவைக்கு ஏற்ப பாசனம் செய்ய வேண்டும்.
வளரும் கிளைகளிலிருந்து வெளிப்புற இலைகளை இடைவிட்ட அறுவடை, 15 நாட்கள் இடைவெளியில் செய்யலாம். பயிரை முழுவதுமாக அறுவடை செய்யாமல் சிறிது நிலத்தில் விட்டு அறுவடை செய்ய முடியும். அப்போதுதான் அது மறுபடியும் வளரும். இவ்வாறு, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.