ADDED : ஜூலை 14, 2024 12:25 AM

இலையுதிர்
காலத்தில்
அமைதியாகவே
இருக்கின்றன
மரங்கள்...
இப்படியாக, 'நறுக்' என நான்கு முதல் ஆறு வார்த்தைகளுக்குள் அடங்கி விடுகிறது கிருஷ்ணமூர்த்தியின் ஹைகூ கவிதைகள். 62 வயதில், கவிஞராக தன்னை முடி சூட்டிக்கொண்ட அவரின் பால்ய காலம் முதல், தற்போது வரை அவரின் வாழ்க்கை எனும் அனுபவம், வார்த்தைகளாக வசந்தம் வீசுகிறது.
அவரை ஊக்குவித்து, ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தரும் பணியை செய்துள்ளது திருப்பூர் சிந்தனை பேரவை. பனியன் நிறுவனத்தில் பேட்டர்ன் மாஸ்டராக பணிபுரியும் கிருஷ்ணமூர்த்தி எழுதிய, 'பூவரச பீப்பீயும், இரயில் சிறுவர்களும்...' என்ற தலைப்பிலான ைஹகூ கவிதை தொகுப்பு பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
'62 வயதில் புத்தகம் எழுதும் ஆர்வம் எப்படி வந்தது?' என கேட்டதும், ஆர்வப் பிரவாகத்துடன் அனுபவத்தை பகிர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி...
''நான், 8ம் வகுப்பு படிக்கும் போதே, அப்பா தவறிட்டார். அம்மா தான் வளர்த்தாங்க. 9ம் வகுப்பு பாதி வரைக்கும் தான் போனேன். அப்புறம் படிப்பை விட்டுட்டு, வேலைக்கு போக துவங்கிட்டேன். 30 வருஷமா பனியன் தொழிலாளியாக வேலை செய்துட்டு இருக்கேன். படிக்கிற வயசில இருந்தே புத்தகம் வாசிக்கிறதுலேயும், இலக்கியத்திலும் நிறைய ஆர்வம் இருந்துச்சு; கிடைக்கிற புத்தகங்களையெல்லாம் படிப்பேன். சின்ன வயசுல ரெண்டு நாடகம் கூட எழுதியிருக்கேன்.
ஒரு புத்தகம் எழுதணும்ங்கற ஆசை ரொம்ப வருஷமாகவே மனசுக்குள்ள இருந்துச்சு. ஆனா, அதுக்கு, ஆக்கமும், ஊக்கமும் தர்றதுக்கு யாரும் இல்ல; யாரை தொடர்பு கொள்றதுன்னு கூட தெரியல. 62 வயசாச்சு. இப்போ தான் புத்தகம் எழுதற வாய்ப்பு கிடைச்சது. புத்தகம் எழுதச் சொல்லி என் நண்பர்கள் ஊக்குவிச்சாங்க.
பள்ளியில் படிக்கும் என் மைத்துனரின் மகளும் என்னை ஊக்குவித்தாள். இதனால், 200 கவிதைகளை உள்ளடக்கிய புத்தகம் வெளியிட்டிருக்கேன். வந்தவாசியில அகநி பதிப்பகம் நடத்தறவங்க, புத்தகத்தை அச்சிட்டு கொடுத்தாங்க.
புத்தகத்தை படிக்கிற நிறைய பேரு பாராட்டறாங்க. 30 வருஷத்துக்கும் மேல மனசுக்குள்ள இருந்த ஆசை நிறைவேறியிருக்கு. ைஹகூ கவிதை வாயிலாக வாழ்வியல் சார்ந்த, இயற்கை சார்ந்த விஷயங்களை சொல்ல ஆசைப்பட்டு தான் ஜென், சென்ரியு வடிவத்தில் கவிதைகளை எழுதியிருக்கேன். 2வது புத்தகம் தயார் செய்துகிட்டு இருக்கேன். படிப்புக்கு மட்டுமல்ல; படைப்புக்கும் வயது தடையில்லைங்கறதுக்கு நானே ஒரு உதாரணம்.
ைஹகூ கவிதை வாயிலாக வாழ்வியல்
சார்ந்த, இயற்கை சார்ந்த விஷயங்களை சொல்ல ஆசைப்பட்டு தான் ஜென், சென்ரியு வடிவத்தில் கவிதைகளை எழுதியிருக்கேன்