ADDED : மே 18, 2024 12:19 AM

திருப்பூர்;நடராஜா தியேட்டர் பாலம் அருகே வடிகால் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், வாகனப் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நொய்யல் ஆற்றங்கரை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு கரைகளிலும், கான்கிரீட் சாய் தளம் அமைக்கப்பட்டுள்ளது. நொய்யலில் வந்து சேரும் கழிவுநீரை சுத்திகரிக்கும் விதமாக சுத்திகரிப்பு மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.நொய்யலில் ஆங்காங்கே இணையும் இந்த கழிவுநீர் வடிகால்கள், கரையை ஒட்டி வடிகால் அமைத்து சுத்திகரிப்பு மையத்துக்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
நடராஜா தியேட்டர் பாலம் அமைந்துள்ள பகுதியில், வடிகால் அமைக்கும் பணி தெற்கு பகுதியில் நடந்து முடிந்துள்ளது. வடக்கு பகுதியில் எம்.ஜி.ஆர்., நகர் பகுதி வழியாக, பாலத்தை ஒட்டி வடிகால் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. வடிகால் தற்போது நடராஜா தியேட்டர் பாலம் இணையும் இடத்தில் பாதியளவு வரை மேற்கொள்ளப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தோண்டிய குழி, பாதியளவு நிற்கும் வடிகால் ஆகியன, நேரு வீதி ரோட்டில் பாலம் இணையும் இடத்தில் ரோட்டின் மையத்தில் உள்ளது. இதனால், பாலம் வழியாக வரும் வாகனங்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றன. போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு, வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
ஆக்கிரமிப்புஅகற்ற வேண்டும்
எம்.ஜி.ஆர்., நகர் பகுதி வழியாக வரும் இந்த வடிகால், ரோட்டைக் கடந்து சாயப்பட்டறை வீதி வழியாக ஆலாங்காட்டில் உள்ள சுத்திகரிப்பு மையம் சென்று சேர வேண்டும். இந்த பகுதியில் வடிகால் அமையவுள்ள இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டுமானப் பணியை விரைந்து செய்து முடிக்க வேண்டும்.

