/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழை பெய்தும் வறட்சியில் விவசாய நிலங்கள்! பி.ஏ.பி., பாசன விவசாயிகள் அதிருப்தி
/
மழை பெய்தும் வறட்சியில் விவசாய நிலங்கள்! பி.ஏ.பி., பாசன விவசாயிகள் அதிருப்தி
மழை பெய்தும் வறட்சியில் விவசாய நிலங்கள்! பி.ஏ.பி., பாசன விவசாயிகள் அதிருப்தி
மழை பெய்தும் வறட்சியில் விவசாய நிலங்கள்! பி.ஏ.பி., பாசன விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஜூலை 18, 2024 10:45 PM
திருப்பூர்:'பி.ஏ.பி., அணைகளில் கணிசமாக மழை பொழிந்தும், நீர் திறந்துவிடாதது அதிருப்தியளிக்கிறது' என, விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
பி.ஏ.பி., தொகுப்பு அணை சார்ந்த பாசனத்தின் வாயிலாக, லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள் பயன் பெறுகின்றன. பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளில் நீர் நிரம்பும் போது, பாசனத்துக்கென தண்ணீர் திறந்துவிடப்படும்.
தற்போது தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பி.ஏ.பி., தொகுப்பு அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. பிரதான நீராதாரமான சோலையாறு அணை, 160 அடி கொள்ளளவில், 150 அடி நிரம்பியுள்ளது. ஆழியாறு அணை, 120 அடி கொள்ளளவில், 101 அடி நிரம்பியுள்ளது. இருப்பினும், 'அணையில் இருந்து தண்ணீர் விடப்படாதது அதிருப்தியளிக்கிறது' என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் (காங்கயம் - வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:
சோலையாறு நிரம்பும் தருவாயில் உள்ளது. சோலையாற்றில் இருந்து பரம்பிக்குளத்துக்கு ஏன் கணிசமான அளவில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. வருண பகவான் கருணை காட்டியும், பி.ஏ.பி., நீர்வளத்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால், பரம்பிக்குளம் 'ஷட்டர்' பணி, இன்னும் நிறைவு பெறவில்லை. அதனால் தான், சோலையாற்றில் இருந்து பரம்பிக்குளத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.
பல லட்சம் விவசாயிகள் பயன்பெற வேண்டிய இந்த நீர் மேலாண்மையை, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகங்கள் கண்டுக் கொள்ளாதது வியப்பளிக்கிறது. பி.ஏ.பி., ஆயக்கட்டில், 75 சதவீதம் வறட்சியின் பிடியில் உள்ளது. கால்நடைகளுக்கும், பயிர்களுக்கும் லாரி தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
சோலையாறு நிரம்பும் போது, அதை திறம்பட பரம்பிக்குளத்துக்கு திறக்காத பட்சத்தில், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும். பரம்பிக்குளத்துக்கு தண்ணீர் திறப்பதில், மேலும் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். தவறும்பட்சத்தில், பொள்ளாச்சி கண்காணிப்பு அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.