/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோதையம்மன் குளத்தில் மண் அள்ள அனுமதியுங்க! மண்பாண்ட தொழிலாளர்கள் வலியுறுத்தல்
/
கோதையம்மன் குளத்தில் மண் அள்ள அனுமதியுங்க! மண்பாண்ட தொழிலாளர்கள் வலியுறுத்தல்
கோதையம்மன் குளத்தில் மண் அள்ள அனுமதியுங்க! மண்பாண்ட தொழிலாளர்கள் வலியுறுத்தல்
கோதையம்மன் குளத்தில் மண் அள்ள அனுமதியுங்க! மண்பாண்ட தொழிலாளர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 17, 2024 08:37 PM
உடுமலை: கொழுமம் கோதையம்மன் குளம் உள்ளிட்ட குளங்களில், மண் அள்ள அனுமதிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம், சங்கராமநல்லுார் மண்பாண்ட தொழிலாளர்கள் மனுக்கொடுத்துள்ளனர்.
உடுமலை அருகே புக்குளம், மரிக்கந்தை, பூளவாடி, பள்ளபாளையம், மடத்துக்குளம் கொழுமம், சங்கராமநல்லுார் உட்பட பல கிராமங்களில், பாரம்பரியமாக, மண் பாண்டங்கள் உற்பத்தி செய்யும் தொழிலில், அதிகமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள், ஆண்டு முழுவதும் மண்பாண்டம் மற்றும் அகல் விளக்கு உற்பத்தியில் ஈடுபடுகின்றனர்.
அனுமதி கிடைப்பதில்லை
அகல் விளக்கு மற்றும் மண்பாண்டம் தயாரிப்புக்கு, பிரத்யேகமான மண் தேவைப்படுகிறது. இவ்வகை மண் கிணத்துக்கடவு கோதவாடி குளத்திலும், கொழுமம் கோதையம்மன் குளம் உள்ளிட்ட சில குளங்களில் மட்டுமே கிடைக்கிறது. எனவே, உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் அனைவரும் அப்பகுதிக்குச்சென்று, டிராக்டர்களில் மண் எடுத்து வந்தனர்.
ஆனால், குளத்திலிருந்து மண் எடுக்க வருவாய்த்துறை அனுமதிப்பதில்லை என, தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர்கள் கூறியதாவது: உடுமலை, மடத்துக்குளம் வட்டாரத்தில் சில குளங்களில் மட்டுமே, மண்பாண்டங்கள் மற்றும் அகல் விளக்கு தயாரிப்புக்கு, உகந்த மண் கிடைக்கிறது. ஆனால், அங்கிருந்து மண் எடுத்து வர பல்வேறு விதிமுறைகளை வருவாய்த்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு, மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மண் அள்ள அனுமதி கொடுத்து அறிவிப்பு வெளியிட்டும், அறிவிப்பு முறையாக அமல்படுத்தப்படவில்லை. ஏற்கனவே, வாகன வாடகை உட்பட காரணங்களால், மண் எடுத்து வர செலவாகிறது.
ஒவ்வொரு முறையும் வாகனத்தோடு சென்று, வருவாய்த்துறை தடை விதிப்பதால், ஏமாற்றத்துடன் திரும்பி வர வேண்டியுள்ளது.
ஆண்டுக்கு சில லோடு மண் கிடைத்தால் கூட அதை இருப்பு வைத்து, மண்பாண்டம் மற்றும் அகல் விளக்கு தயாரித்துக்கொள்வோம்.
மூலப்பொருள் கிடைப்பதே தட்டுப்பாடாக இருப்பதால், எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எவ்வித நிபந்தனையும் இல்லாமல், மண் அள்ளிக்கொள்ள திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.
இப்பிரச்னை குறித்து கொழுமம், சங்கராமநல்லுார் பகுதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், நேரடியாகவும் மனுக்கொடுத்துள்ளனர்.