/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொன்விழாவுக்கு தயாராகும் அமராவதி முதலை பண்ணை சுற்றுலா முக்கியத்துவம் அதிகரிக்க திட்டம்
/
பொன்விழாவுக்கு தயாராகும் அமராவதி முதலை பண்ணை சுற்றுலா முக்கியத்துவம் அதிகரிக்க திட்டம்
பொன்விழாவுக்கு தயாராகும் அமராவதி முதலை பண்ணை சுற்றுலா முக்கியத்துவம் அதிகரிக்க திட்டம்
பொன்விழாவுக்கு தயாராகும் அமராவதி முதலை பண்ணை சுற்றுலா முக்கியத்துவம் அதிகரிக்க திட்டம்
ADDED : மே 27, 2024 11:59 PM

உடுமலை;'பொன் விழாவுக்கு தயாராகி கொண்டிருக்கும் அமராவதி முதலைப்பண்ணையை மேம்படுத்த, சுற்றுலாத்துறையும் கை கோர்க்க தயாராக உள்ளது' என, மாவட்ட சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில், அமராவதி அணை, பூங்கா, படகுத்துறை மற்றும் வனத்துறை முதலை பண்ணை என, சுற்றுலா மையமாக உள்ளது.
அணை அருகே, வனத்துறை சார்பில்முதலை பண்ணை, 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
கடந்த, 49 ஆண்டுகளாக வனத்துறையால், ஆசியாவில் அழிந்து வரும் இனமாக கருதப்படும், சதுப்பு நில முதலைகளை பாதுகாக்கும் வகையில், 80க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. தினமும் முதலைகளுக்கு, 35 கிலோ மாட்டிறைச்சி, 14 கிலோ மீன் துண்டுகள் உணவாக வழங்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
கல்வி விழிப்புணர்வு, சுற்றுலா மேம்பாடு, வனம் மற்றும் வன விலங்குளை காப்பதன் அவசியம் குறித்து விளக்கும் வகையில், முதலை பண்ணை அமைந்துள்ளது.
இப்பண்ணை, பொன் விழாவுக்கு தயாராகி வருகிறது. வனத்துறை சார்பில், புல் நடைபாதை, முயல், கொக்கு, யானை, புலி, சிறுத்தை, இருவாச்சி, ஒட்டகச்சிவிங்கி என வன விலங்குகளை தத்ரூபமாக அமைக்கப்பட்ட சிலைகள் மற்றும் வன விலங்குகள், பறவைகள் வடிவ பொம்மைகளில் அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் என, கடந்த ஓராண்டுக்கும் மேலாக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், சுற்றுலா பயணியருக்கான அடிப்படை வசதிகள், சதுப்பு நில முதலைகள் முட்டையிடுவது முதல்அதன் ஆயுட் காலம் வரையிலான வாழ்வியல் முறைகள், அவற்றின் குணங்கள் குறித்து சுற்றுலா பயணியர், மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், படங்களும், போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், பண்ணையை பார்வையிட்டார். முதலைப் பண்ணை வளாகத்தில் உள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்கா, தோட்டம் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டனர்.
மேலும், காட்டுபதி மலைவாழ் மக்களின், சூழல் மேம்பாட்டு குழுவினர் நடத்தும் சூழல் கடையையும் பார்வையிட்டார். வனக்காப்பாளர் அன்னபூரணி, திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்குழு நிர்வாகிகள் பிரசாத், ராம் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வின் போது, வனத்துறையினர் கூறுகையில், 'அமராவதி அணையை காண வரும் சுற்றுலா பயணிகள், முதலை பண்ணையையும் பார்க்க வருகின்றனர். முதலைகளை கண்டு வியக்கும் மக்களுக்கு அவற்றின் வாழ்வியல் சூழலை விளக்கும் வகையிலான, முழு தகவல்களும் இடம் பெற்றுள்ளன. சுமார், 80 முதலைகள் இங்கு பராமரிக்கப்படுகின்றன,' என்றனர்.
'முதலை பண்ணைக்கு வரும் சுற்றுலாப் பயணியரை மேலும் ஈர்க்கும் வகையிலான, சுற்றுலா சார்ந்த கட்டமைப்பு சார்ந்து பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தால், அதுதொடர்பான விரிவான திட்ட அறிக்கையை, சுற்றுலா துறைக்கு அனுப்பி வையுங்கள்' என, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், வனத்துறை அலுவலர்களிடம் கூறினார்.
பின், சுற்றுலா பயணியரிடம் கருத்து கேட்டார்.