/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி அணை நீர்மட்டம் 6 அடி உயர்வு
/
அமராவதி அணை நீர்மட்டம் 6 அடி உயர்வு
ADDED : ஜூன் 28, 2024 07:35 AM

உடுமலை: அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, இரு நாட்களில் ஆறு அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ள அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த, 25ம் தேதி, அணை நீர்மட்டம், 52.96 அடியாக இருந்த நிலையில், நீர்வரத்து அதிகரிப்பால், இரு நாட்களில் ஆறு அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில், 58.17 அடியாகவும், மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 1,616.08 மில்லியன் கனஅடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு, 2,070 கனஅடியாக இருந்தது.
அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசனத்திற்கு, வினாடிக்கு, 150 கன நீர் திறக்கப்பட்டிருந்தது.