/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணி தீவிரம்; புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 21ல் நீர் திறக்க திட்டம்
/
அமராவதி பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணி தீவிரம்; புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 21ல் நீர் திறக்க திட்டம்
அமராவதி பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணி தீவிரம்; புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 21ல் நீர் திறக்க திட்டம்
அமராவதி பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணி தீவிரம்; புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 21ல் நீர் திறக்க திட்டம்
ADDED : ஜூலை 10, 2024 10:24 PM

உடுமலை : அமராவதி புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, வரும், 21ல் நீர் திறக்கும் வகையில், பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில், பழைய ஆயக்கட்டு, எட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களில், குறுவை நெல் சாகுபடிக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.
அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 25 ஆயிரத்து, 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அணையிலிருந்து, 64 கி.மீ., துாரம் அமைந்துள்ள பிரதான கால்வாய் வழியாக, இந்நிலங்களுக்கு நீர் வழங்கப்படுகிறது.
பிரதான கால்வாய் பராமரிப்பு இல்லாமல், கான்கிரீட் கரைகள், சிலாப்கள் உடைந்து காணப்பட்டது.
மேலும், மழை காலங்களில், கால்வாயின் இரு புறமும் அமைந்துள்ள ஓடைகள் வழியாக நீர் வெளியேறும் வகையிலும், கால்வாய் பாதிக்காத வகையிலும், கால்வாயின் குறுக்கே, மேல் மட்ட நீர் வழிப்பாதை மற்றும் கீழ் பகுதியில் சுரங்க வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
பல கட்டுமானங்கள் சிதைந்து, அடிக்கடி கால்வாய் உடைப்பு ஏற்பட்டு வந்தது. இதனால், பாசன நீர் விரையமாவதோடு, பயிர்களும் பாதித்தன. இதற்கு தீர்வு காண, கால்வாயை முழுமையாக புதுப்பிக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், புதுப்பிக்கும் பணி மேற்கொள்ள, அரசு ரூ.4.90 கோடி நிதி ஒதுக்கியது. இந்நிதியில், பார்த்தசாரதிபுரம், பெருமாள் புதுார், சாமராயபட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், ரெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில், 2 மேல்மட்ட நீர் வழிப்பாதை மற்றும், 8 கீழ் மட்ட சுரங்க நீர் வழிப்பாதை புதுப்பிக்கும் பணி மற்றும் 14.4 கி.மீ., துாரம் கால்வாய் புதுப்பிக்கும் பணி துவங்கியது.
இரு மாதமாக பணிகள் நடந்து வரும் நிலையில், புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, கரும்பு, தென்னை உள்ளிட்ட நிலைப்பயிர்களை காப்பாற்ற, அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில், வரும், 21ம் தேதி, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் வழங்கும் வகையில், பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.