ADDED : செப் 15, 2024 01:33 AM

அவிநாசி: பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை பணிகளை உடனடியாக துவங்க வலியுறுத்தியும், வேகத்தடை அமைக்க கேட்டும், மா.கம்யூ.,வினர் மனு அளித்தனர்.
இது குறித்து, பி.டி.ஓ., விஜயகுமாரிடம், (ஊராட்சி), மா.கம்யூ., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த மனு:
அவிநாசி ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சி, காரைக்குட்டைப்புதுார் முதல் ஏரி மாரியம்மன் கோவில் வரை உள்ள மண் சாலையை கப்பி சாலையாக அமைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால், அனுமதி வழங்கி, அளவீடு பணிகளும் முடிந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
காரைக்குட்டைபுதுார் கிராம விவசாயிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என பலரும் இதனால், பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மழைக்காலங்களில் குட்டை போல தேங்கி நிற்கும் சாலையால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே, சாலை அமைக்கும் பணிகளை தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல, அவிநாசி பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகத்திடம் அளித்த மனுவில், 'கூட்டப்பள்ளி முதல் அவிநாசி வரை உள்ள சாலை, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலை. இந்த பகுதியில் துவக்கப்பள்ளி, அங்கான்வாடி அமைந்துள்ளது. இங்கு வேகத்தடை அமைத்து தரவேண்டும்,' என்று கூறியுள்ளனர்.
இவ்விரு நிகழ்ச்சியிலும் மா.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் பழனிசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜன், வடுகபாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பழனிசாமி, தீபா, ஆறுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.