/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நில அதிர்வு? கல்குவாரிகளில் ஆய்வு; கலெக்டர் திடீர் உத்தரவு
/
நில அதிர்வு? கல்குவாரிகளில் ஆய்வு; கலெக்டர் திடீர் உத்தரவு
நில அதிர்வு? கல்குவாரிகளில் ஆய்வு; கலெக்டர் திடீர் உத்தரவு
நில அதிர்வு? கல்குவாரிகளில் ஆய்வு; கலெக்டர் திடீர் உத்தரவு
UPDATED : ஆக 28, 2024 06:28 AM
ADDED : ஆக 27, 2024 11:29 PM

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம் பலத்த சத்தத்துடன், நில அதிர்வு ஏற்பட்டது. கல்குவாரிகளில் அதிக திறனுள்ள வெடி வைக்கப்பட்டதா என ஆய்வு நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை, 3:30 மணிக்கு, மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்பட்டது. குறிப்பாக, காங்கயம் அருகே பரஞ்சேர்வழி பகுதியில் அதிக அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதுதவிர, காங்கயம், தாராபுரம், ஊத்துக்குளி மட்டுமின்றி திருப்பூர் அருகே கோவில் வழி உட்பட பல பகுதிகளிலும், பலத்த சத்தத்தை தொடர்ந்து நில அதிர்வு உணரப்பட்டது.
இது தொடர்பாக சேலத்திலுள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, 'நேற்று (26ம் தேதி) அந்தமான் மற்றும் அசாமில் மட்டுமே நில நடுக்கம் பதிவாகியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் எந்த நில நடுக்கமும் ஏற்படவில்லை. அருகிலுள்ள குவாரிக்கு வெடி வைக்கும்போது ஏற்பட்ட அதிர்வாக இருக்கலாம்,' என்றனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான குவாரிகள், அனுமதிக்கப்பட்டதைவிட அதிக வெடிமருந்து பயன்படுத்தி, கனமவளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. திருப்பூரில் நேற்று (நேற்றுமுன்தினம்) ஏற்பட்ட நில அதிர்வுக்கும், கல்குவாரிகள்தான் காரணம். மாவட்ட நிர்வாகமோ, பேரிடர் மேலாண்மை துறையோ, நில அதிர்வுக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்து, மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் உள்ள கல்குவாரிகளின் இயக்கம் குறித்து கலெக்டர் நேரடியாக ஆய்வு நடத்தவேண்டும். சட்டவிரோத குவாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஆய்வு செய்யப்படும்
-------------------
கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் சில இடங்களில் நேற்று (நேற்றுமுன்தினம்) நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. வானிலை ஆய்வுமையத்திலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் கிடைக்கவில்லை. கல்குவாரிகளில் வெடி வைக்கப்பட்டதால் அதிர்வு ஏற்பட்டதா என, விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக, கல்குவாரிகளில் ஆய்வு செய்யப்படும். விதிமீறல்கள் ஏதும் நடந்திருந்தால், நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.