/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குற்றவாளி சிக்கியும் கைக்கு வராத தங்க நகை
/
குற்றவாளி சிக்கியும் கைக்கு வராத தங்க நகை
ADDED : ஆக 02, 2024 05:18 AM

பல்லடம் : பல்லடம் அடுத்த, பருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் 46; மாற்றுத்திறனாளி. மனைவி, மகனுடன் வசிக்கிறார். ''ஒரு ஆண்டுக்கு முன் திருடு போன, 9 கிராம் நகைகளை போலீசார் இதுநாள் வரை மீட்டுத் தரவில்லை'' என, விஜயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு ஜன., 10ம் தேதி மனைவி - மகனுடன் ஊருக்கு சென்றேன். வீட்டுக்கு திரும்பிய போது, பீரோவில் இருந்த 6 கிராம் தங்க டாலர் மற்றும் மூன்றரை கிராம் தங்க மோதிரம் ஆகியவை திருடு போயின. தங்க நகைகளை திருடிய எனது உறவினரை காமநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்தனர். கைதானவர் ஜாமீனில் வந்து வெகு நாட்கள் ஆகியும், இதுவரை, திருடு போன தங்க நகைகள் திரும்ப கிடைக்கவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை திரும்பக் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு, கடந்த ஒரு ஆண்டாக போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாய் நடந்து வருகிறோம். பல்லடம் டி.எஸ்.பி.,யிடமும் இது குறித்து புகார் அளித்துள்ளோம். சிரமப்பட்டு சேகரித்து வைத்த பணத்தில் வாங்கிய தங்க நகைகள் திரும்ப கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
காமநாயக்கன்பாளையம் போலீசாரிடம் கேட்டதற்கு, ''திருடு போன தங்க நகையில், 4 கிராம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்ட பின் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். புகார்தாரர் கோர்ட் மூலம் அதைப் பெற்றுக் கொள்ளலாம்'' என்றார்.