/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வலிப்பு நோய் தீர்க்கும் வலுப்பூரம்மன்
/
வலிப்பு நோய் தீர்க்கும் வலுப்பூரம்மன்
ADDED : ஆக 08, 2024 11:19 PM

கொங்கு நாட்டிலுள்ள, 24 நாடுகளில் பொங்கலுார் நாடும் ஒன்று. இப்பகுதியில், வானவஞ்சேரி என்று அழைக்கப்படும் அலகுமலை அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில் வலுப்பூர் அம்மன் கோவில் உள்ளது.
விக்கிரமாதித்ய சோழ மன்னர் காலத்தில், வலுப்பூரம்மன் என்றும் அழைக்கப்பட்டதாக செப்பேடு கூறுகிறது. சோழ மன்னர் விக்கிரமாதித்தன் மகள் மைக்குழலிக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும், அரண்மனை வைத்தியர்கள் உள்ளிட்டோரிடம் சிகிச்சை பெற்றும் நோய் தீரவில்லை என்பது ஐதீகம். இந்நோய் அம்மன் அருளால் மட்டுமே நீங்கும் என்றும் கொங்கு நாட்டின் மேலை சிதம்பரம் என்று அழைக்கப்படும் பேரூர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் இந்நோய் தீரும் என்று ஆலோசனை கூறப்பட்டது.
தன் படை பரிவாரங்களுடன் மன்னர் விக்கிரமாதித்தன் தன் மகளை அழைத்துக் கொண்டு மேற்கு நோக்கி வரும் வழியில் ஒரு நாள் இரவு படை பரிவாரங்களுடன் வானவஞ்சேரியில் தங்கி உள்ளார். அன்று இரவு பத்ரகாளியம்மன் மன்னரின் கனவில் தோன்றி வேட்கோவன் ஒருவன் கத்தாங்கண்ணியில் பூசாரியாக இருக்கிறான். அவனால் உன் மகளின் நோய் தீர்க்க வழி ஏற்படும் என்று கூறி மறைந்தார்.
அதனைத் தொடர்ந்து மன்னர் தன் படை வீரர்களை அழைத்து பூசாரி வேட்கோவனை அழைத்து வர கட்டளையிட்டார். அவர்களும் அழைத்து வந்தனர். அவர் பூசாரியிடம் இந்நோய் தீர என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு பூசாரி இளவரசி மைக்குழலியை பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று அங்கே இளவரசி முன் திரையிட்டு விளக்கேற்றி அந்நிழல் உருவத்தை மணலில் பட செய்து வலிப்பு நோயை கண்டறிய வேண்டும் என்றார். அதன்படியே ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்படி செய்த போது இளவரசி மைக்குழலியின் உடலில், 32 இடங்களில் வலிப்பு நோய் காணப்பட்டது. இளவரசியின் நிழல் உருவத்தின் மீது சூடேற்றிய இரும்பு கம்பியால் சூடு வைக்கப்பட்டது. இளவரசியின் வலிப்பு நோய் முற்றிலுமாக குணமானது. இதனால் மகிழ்ந்த அரசர் விக்கிரமாதித்தன், பூசாரி வேட்கோவனுக்கு ஆறு கிராமங்களை தானமாக கொடுத்தார் என்பது வரலாறு.
வலிப்பு நோயை நீக்கியதால் இத்தலம் வலுப்பூர் அம்மன் என்று அழைக்கப்படுகிறது. 400 ஆண்டுகக்கு முன்பு நடைபெற்றதாக கூறப்படும் இந்நிகழ்ச்சி செப்பேடு ஒன்றில் காணப்படுகிறது.
கோவிலில் மூலஸ்தானம் அர்த்தமண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம் உள்ளது. மூலஸ்தானத்தில் வலுப்பூரம்மன், அர்த்தமண்டபத்தில் உற்சவமூர்த்தி, பெரிய விநாயகர், மகா மண்டபத்தில் கன்னிமாரும், விநாயகரும் நாகரும் கிழக்குமுகமாக அமர்ந்து அருள் பாலிக்கின்றனர். பரிவார தெய்வங்கள் இதன் உள்ளே உள்ளது.
அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வலுப்பூரம்மனுக்கு செவ்வரளி பூவை பக்தர்கள் அணிவிக்கிறார்கள். தைப்பூசத்துக்கு ஒரு வாரம் முன் தேரோட்டம் நடைபெறும். கோவிலிலிருந்து உற்சவமூர்த்தி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அலகுமலை கைலாசநாதர் கோவில் முன் நிறுத்தப்பட்டுள்ள தேரில் ஏற்றப்பட்டு பூஜை நடைபெறும்.
கைலாசநாதர் கோவிலை சுற்றி தேரோட்டம் நடைபெறுகிறது. கோவில் திருப்பணி குழு தலைவராக சேமலை கவுண்டம்பாளையம் சிதம்பரம் பணியாற்றி வருகிறார்.