/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆண்டிபாளையம் குளக்கரையில் குவியும் மாசு; பொலிவாக்கும் பணிக்கு முட்டுக்கட்டை
/
ஆண்டிபாளையம் குளக்கரையில் குவியும் மாசு; பொலிவாக்கும் பணிக்கு முட்டுக்கட்டை
ஆண்டிபாளையம் குளக்கரையில் குவியும் மாசு; பொலிவாக்கும் பணிக்கு முட்டுக்கட்டை
ஆண்டிபாளையம் குளக்கரையில் குவியும் மாசு; பொலிவாக்கும் பணிக்கு முட்டுக்கட்டை
ADDED : மே 30, 2024 12:44 AM

திருப்பூர் : 'தொழில் நகரின் மத்தியில் இயற்கையாய் அமைந்துவிட்ட ஆண்டிபாளையம் குளம் மாசுபடுவதை தடுக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கதிரவனின் ஒளிக்கீற்றை உள்வாங்கி, வீசும் காற்றின் வேகத்தில் சிறு அலையாக எழும்பி ததும்பும் தண்ணீரின் அழகை அடையாளமாக கொண்டிருக்கிறது, ஆண்டிபாளையம் குளம்.
ஆண்டு முழுக்க தண்ணீர் ததும்பும் இக்குளத்தை சுற்றுலா தளமாக மேம்படுத்த, 1.5 கோடி ரூபாய் செலவில், சுற்றுலா துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
சுற்றுலா வளர்ச்சி திட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக படகு இல்லம், சிறுவர் பூங்கா, உணவகம், குயிக் பைட்ஸ், டிக்கெட் கவுன்டர், குடிநீர் வசதி, அலங்கார மின் விளக்குகள் மற்றும் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
'வனத்துக்குள் திருப்பூர் அமைப்பினரின் ஒத்துழைப்புடன், குளத்தை சுற்றி மரக்கன்று நட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. படகு சவாரி உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த பணிகள், ஜூலை மாதம் வேகமெடுக்கும்' என, சுற்றுலாத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குளக்கரையோரம், பிளாஸ்டிக் கழிவு, குப்பைகள் நிரம்பிக் கிடக்கின்றன; மீன்கள் செத்து மிதக்கின்றன. கரையோரம் முழுக்க, பழைய துணிகள் உள்ளிட்ட வீடுகளில் வீணாகும் பொருட்கள் வீசியெறிப்பட்டு, மாசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
குளத்தை மேம்படுத்த சுற்றுலா துறை மேற்கொண்டு வரும் முயற்சி ஒருபுறமிருக்க, இதுபோன்று மாசுபாடு, அதற்கு பெரும் சவாலாகவே இருக்கும்; இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான வழிவகை குறித்து சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
குளத்தை சுற்றி வேலி அமைப்பது, குளத்தை மாசுபடுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள், குளத்தை பார்வையிட வரும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் ஏற்படுத்துவது போன்ற பணிகளில் கவனம் செலுத்துவது அவசியமாகி இருக்கிறது.