ADDED : ஜூலை 14, 2024 12:35 AM
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி பகுதியில், சாலை அமைப்பது, பாதாள சாக்கடை கட்டும் பணிகள் தொடர்ந்து தாமதமாக நடப்பதாகவும், அதனை விரைவுப்படுத்த கேட்டும், கலெக்டரிடம், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மனு அளித்தனர்.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர் கண்ணப்பன் ஆகியோர், கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஆகியோரிடம் அளித்த மனு விவரம்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ரோடு விரிவாக்க பணி தாமதமாக நடக்கிறது.
இதனால், பிரதான ரோடுகளில் பாதாள சாக்கடை குழாய்; பிரதான குடிநீர் குழாய் பதித்தல் ஆகிய பணிகள் தொடராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இது போன்ற காரணங்களால் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் சென்று புகுவது; வழித்தடத்தில் தேங்கி நிற்பது போன்ற பிரச்னைகளை மக்கள் சந்திக்கும் நிலை உள்ளது. தொற்று நோய் பரவும் அபாயம்; போக்குவரத்து நெருக்கடி; சிறு விபத்துகள் என பல பகுதிகளில் இந்நிலை காணப்படுகிறது.தாராபுரம் ரோடு, காங்கயம் கிராஸ் ரோடு, கே.எஸ்.சி., ரோடு ஆகிய முக்கிய ரோடுகளில் இப்பிரச்னை நீண்ட நாட்களாக உள்ளது.
பல தரப்பினரும் பெரும் அவதிக்கும் சிரமத்துக்கும் உள்ளாகின்றனர்.நிர்வாகத்தின் மீது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலை நிலவுகிறது. துறை வாரியாக அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.