ADDED : ஆக 10, 2024 09:22 PM

பல்லடம்:திருப்பூர் முதல் -பல்லடம் வரை உள்ள நெடுஞ்சாலை முழுவதும் ஏராளமான பனியன் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன. திருப்பூர் மாநகராட்சி சார்பில், டி.கே.டி., மில் வரையும், பல்லடம் நகராட்சி சார்பில், மகாலட்சுமி நகர் வரையிலும், மையத்தடுப்பில் விளக்குகள் பளிச்சிடுகின்றன. இடையிடையே, முக்கிய பகுதிகள், பஸ் ஸ்டாப்புகளில் மட்டும் உயர்கோபுர விளக்குகள் உள்ளன.
போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டின் இடைப்பட்ட பகுதிகள் இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. குறிப்பாக, வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் மிகுந்த பல்லடம் - திருப்பூர் ரோடு, அருள்புரம், குங்குமபாளையம் பிரிவு, தண்ணீர் பந்தல, பகுதிகளில் போதிய விளக்கு வசதியின்றி, இரவு நேரங்களில், ரோடு இருள்மயமாக காணப்படுகிறது.
இதனால், விபத்து அபாயம் ஒருபுறம் இருக்க, திருட்டு வழிப்பறி சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் இது சமூக விரோதிகளுக்கு சாதகமாகவும் அமையக்கூடும் என்பதால், போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் மிகுந்த அருள்புரம் பகுதியில், மையத்தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
--
பல்லடம் - திருப்பூர் ரோடு, அருள்புரம் பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது.