/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாற்றுப்பண்ணையில், 39 ஆயிரம் மரக்கன்றுகள் தயார்: ஊராட்சிகளில் மரம் வளர்க்க வலியுறுத்தல்
/
நாற்றுப்பண்ணையில், 39 ஆயிரம் மரக்கன்றுகள் தயார்: ஊராட்சிகளில் மரம் வளர்க்க வலியுறுத்தல்
நாற்றுப்பண்ணையில், 39 ஆயிரம் மரக்கன்றுகள் தயார்: ஊராட்சிகளில் மரம் வளர்க்க வலியுறுத்தல்
நாற்றுப்பண்ணையில், 39 ஆயிரம் மரக்கன்றுகள் தயார்: ஊராட்சிகளில் மரம் வளர்க்க வலியுறுத்தல்
ADDED : மே 27, 2024 11:34 PM

உடுமலை;பருவநிலை மாற்றத்தையொட்டி பசுமையை பராமரிக்க, உடுமலை ஒன்றிய நாற்றுப்பண்ணையில், 39 ஆயிரம் மரக்கன்றுகள் தயார்நிலையில் உள்ளன.
தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராமங்களின் சுற்றுச்சூழல், துாய்மை, உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விதமான வளர்ச்சிக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதில் கிராமங்களின் சுற்றுச்சூழலை பராமரிக்கவும், பசுமையை நிலைநிறுத்தவும் தொடர்ந்து மண்வளத்தையும், நிலைத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்தவும், ஊராட்சிகளில் மரக்கன்று நடும் திட்டம் செயல்படுகிறது. நீர்நிலைகள், குளக்கரைகள், பள்ளி வளாகம், பொது இடம், ரிசர்வ் சைட்கள், அரசு கட்டட வளாகம், ஊராட்சி நிர்வாக வளாகம் உள்ளிட்ட இடங்களில் ஊராட்சி நிர்வாகங்களின் சார்பில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
ஒவ்வொரு ஒன்றியத்திலும், குறிப்பிட்ட ஊராட்சி நிர்வாகத்தின் கண்காணிப்பில், தேசிய ஊரக வேலைஉறுதி திட்டப்பணியாளர்கள் மரக்கன்றுகளை பராமரிக்கின்றனர்.
உடுமலை ஒன்றியத்தில், போடிபட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன.
ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் விதைகளாக வழங்கப்படுகிறது. அவற்றை முறையான வழிமுறைகளில் பாத்தி அமைத்து, அதன் பின்னர் பதியம் போட்டு மரக்கன்றுகளாக வரும் வரை பணியாளர்கள் பராமரிக்கின்றனர். ஒரு மரக்கன்று உறுதியாக வளர, குறைந்தபட்சமாக ஆறு மாத காலம் தேவைப்படுகிறது.
போடிபட்டியில் உள்ள நாற்றுபண்ணையில் பழவகை மரங்கள், செடிகள், புளி, வேம்பு, புங்கம் போன்ற மரவகைகள் என, பல ஆயிரம் கன்றுகள் தொடர்ந்து பராமரிக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டில் மட்டுமே, 35 ஆயிரத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. வனத்துறை, ஊராட்சி நிர்வாகம், விவசாயிகள், பள்ளிகள், சேவை மையங்களும் பெற்றுச்செல்கின்றன.
ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், கிராமங்களை பசுமையாக பராமரிக்கவே இத்திட்டம் முதன்மையாக கொண்டுவரப்பட்டது. ஆனால், மிக சில ஊராட்சிகளில் மட்டுமே இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது.
பொது இடங்களில், குளக்கரைகளில் ஊராட்சி நிர்வாகத்தினர் மரக்கன்றுகளை நடுவதுடன் விடுகின்றனர். முறையான பராமரிப்பு இல்லாமல் அவை முழுவதும் வீணாகிறது.
பல ஊராட்சிகளில் இப்பிரச்னையை தவிர்க்க, மரம் வளர்ப்பு திட்டம் பின்பற்றப்படுவதில்லை. இதனால் நிலத்தடி நீர்வளமும் குறைந்து வருகிறது. நீர்நிலைகளில் சீமைகருவேல மரங்கள்தான் அதிகம் நிறைந்து வருகின்றன.
கிராமப்பகுதிகளில் வெப்பம் அதிகரிப்பதோடு, பசுமையும் பாதிக்கப்படுகிறது. தற்போது மட்டுமே போடிபட்டி நாற்றுப்பண்ணையில் புளியம், பூவரசன், வேம்பு, நாவல், வாகை, இலுப்பை, புங்கன், பெரிய நெல்லிக்காய், அலங்காரகொன்றை என மொத்தமாக, 35 ஆயிரத்து 700 மரக்கன்றுகளும்,
பழவகையில் எலுமிச்சை, கொய்யா, மாதுளை, சீதாப்பழம், பப்பாளி, பலாமரம் என, 3,295 மரக்கன்றுகளும் வினியோகிக்க தயார்நிலையில் உள்ளன.
கோடை முடிந்து பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஊராட்சிகளில் மரம் வளர்ப்பு திட்டத்துக்கு, வேலை உறுதி திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென சுற்றுச்சூழல் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.