/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கைக்கொடுக்குமா பருவ மழை?
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கைக்கொடுக்குமா பருவ மழை?
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கைக்கொடுக்குமா பருவ மழை?
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கைக்கொடுக்குமா பருவ மழை?
ADDED : மே 16, 2024 02:03 AM

திருப்பூர்:'முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், 'அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மழைப்பொழிவு இருக்க வேண்டும்' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, 1,652 கோடி ரூபாய் மதிப்பில், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நடந்து முடிந்திருக்கிறது. ஆறு நீரேற்று நிலையங்கள் வாயிலாக, 1,045 குளம் குட்டைகளில் நீர் நிரப்பும் இத்திட்டம், வெள்ளோட்டம் பார்க்கும் பணியும் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.
நீலகிரி மாவட்டம், பில்லுார் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் உட்பட மழையின் போது மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வழிந்தோடி செல்லும் நீர், காலிங்கராயன் அணைக்கட்டு தாண்டி உபரியாக வெளியேறும்போது, அந்த நீர் தான் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
எனவே, உபரி நீர் வெளியேறும் அளவுக்கு பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தால் தான், அத்திக்கடவு திட்டம் செயல்பாட்டுக்கு வரும். அதனடிப்படையில், 2023 ஜூன், ஜூலையில் பெய்யும் பருவமழையை கணக்கிட்டு, 2023, ஆக., 15ல், திட்டத்தை துவக்க, நீர்வளத்துறையினர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், எதிர்பார்த்த மழை பெய்யாததால், திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாமல் போனது. இதற்கிடையில், காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் இருக்கிற நீரை வைத்து, திட்டம் சார்ந்த குளம், குட்டைகளில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
குளம், குட்டைகளில் பொருத்தப்பட்ட உபகரணங்கள், சில இடங்களில், சமூக விரோதிகளால் உடைத்து, நாசப்படுத்தப்படுகிறது; பல இடங்களில், காட்சிப் பொருளாகவே உள்ளது. இச்சூழலில், இந்தாண்டு பருவமழை கூடுதலாக பெய்யும்; முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை பெய்யும் என, வானிலை மையம் கணித்துள்ளது.
இதனால், திட்டம் சார்ந்த மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், அத்திக்கடவு திட்ட போராட்டக்குழுவினர், அத்திக்கடவு திட்டத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர். பவானி ஆற்றில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து, உபரி நீர் வெளியேறும் அளவுக்கு மழை பெய்ய வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.
நீர்வளத்துறையினர் கூறுகையில், 'பருவமழை தான், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணியின் துவக்க விழாவை தீர்மானிக்கும்' என்கின்றனர்.