/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடி வெள்ளி சிறப்பு பூஜை கோலாகலம்
/
ஆடி வெள்ளி சிறப்பு பூஜை கோலாகலம்
ADDED : ஜூலை 26, 2024 11:39 PM

திருப்பூர்:'மஞ்சளுடன் கலந்த வேப்பிலை மணம்... பல்வகை மலர்கள், வாசனை பத்தி, கற்பூரம் கொளுத்தும் நறுமணம் என, அம்மன் கோவில்களில் ஆடி மாத இரண்டாவது வெள்ளியான நேற்றும், பக்திமணம் கமழ்ந்தது.
ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையான நேற்று, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது. சில கோவில்களில், அதிகாலை 6:00 மணிக்கே, அபிேஷக மற்றும் அலங்காரபூஜைகள் நடந்தது. பக்தர்கள் தொடர்ந்து, சுவாமி தரிசனம் செய்தன.
பெரும்பாலான கோவில்களில், நேற்று மதியம் உச்சி பூஜை நடந்தது. அபிேஷகத்தை தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. காய்கறிகள் அலங்காரம், மலர் அலங்காரம், வளையல் அலங்காரம், சவுரிமுடி அலங்காரம், ராஜ அலங்காரம், மஞ்சள்காப்பு அலங்காரம் என, அலங்காரபூஜைகள் விமரிசையாக நடந்தது.
ஆடிவிரதம் இருந்த பக்தர்கள், வீட்டில் இருந்து ராகிக்கூழ் தயாரித்து எடுத்து வந்திருந்தனர். அம்மனுக்கு படைத்து வழிபட்ட பின், பக்தர்களுக்கு பிரசாதகமாக வழங்கினர். திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், காலை, 10:30 மணிக்கு, ஸ்ரீவிசாலாட்சி அம்மன் உற்சவருக்கு, கலச அபிேஷகம் மற்றும் சிறப்பு அபிேஷம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. மாலை, 6:15 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட விசாலாட்சி அம்மன் உற்சவரை, ஊஞ்சலில் வைத்து தாலாட்டி பாடும், பொன்னுாஞ்சல் உற்சவ நிகழ்ச்சியும் நடந்தது.பூச்சாடு செல்வ விநாயகர் கோவிலில், மீனாட்சி அம்மன் வழிபாட்டுடன், திருவிளக்கு பூஜை விமரிசையாக நடந்தது. டவுன் மாரியம்மன், போலீஸ் லைன் மாரியம்மன், கோட்டை ஸ்ரீமாரியம்மன், கருவம்பாளையம் மாகாளியம்மன், ஆண்டிபாளையம் மாரியம்மன், பிச்சம்பாளையம் மாரியம்மன், பெருமாநல்லுார் கொண்டத்துக்காளியம்மன் என, அனைத்து அம்மன் கோவில்களிலும் நேற்று ஆடி வெள்ளி பூஜைகள், அன்னதானம் விமரிசையாக நடந்தன.