/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சராசரியை எட்டிய கோடை மழை கைகொடுக்குமா பருவமழை?
/
சராசரியை எட்டிய கோடை மழை கைகொடுக்குமா பருவமழை?
ADDED : ஜூன் 18, 2024 11:30 PM
பல்லடம்:விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் நிறைந்த பல்லடம் வட்டாரத்தில், பருவமழை மற்றும் பி.ஏ.பி., நீரை நம்பியே விவசாயம் நடந்து வருகிறது.
பி.ஏ.பி., பாசன நீர் மூலம், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. இரு பருவ மழைகள் மூலம் ஆண்டுக்கு, 500 மி.மீ., மழை பல்லடம் வட்டாரத்துக்கு கிடைக்கிறது.
சில நேரங்களில், ஏற்ற இறக்கங்களால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு, 490 மி.மீ., மழை கிடைத்தது. இருப்பினும், நடப்பு ஆண்டு, கடுமையான வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
வழக்கத்தை காட்டிலும் கோடை வெய்யில் வாட்டி வதைக்க, மற்றொரு புறம், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, குடிநீருக்கு மட்டுமன்றி, பாசன நீரிருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
நீரின்றி தென்னைகள் கருகின. சிறுவாணி, பில்லுார் உட்பட பெரும்பாலான அணைகளில் நீர் இருப்பு பூஜ்ஜியத்தை எட்டும் நிலை ஏற்பட்டது. இவ்வாறான சூழலில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோடை மழை கைகொடுத்தது.
ஜன., முதல் மே வரை வெறும், 26 மி.மீ., மழை மட்டுமே பெய்திருந்த நிலையில், மே மாதம் கிடைத்த கோடை மழை வெப்பத்தை தணித்ததுடன், வறட்சியின் பிடியில் இருந்த பாசன பரப்புகளை நனைத்தது.
மே மாதம் மட்டும், சராசரி அளவை எட்டிய கோடை மழை, 104 மி.மீ., பதிவானது. தொடர்ந்து, இம்மாதம் துவங்கும்பருவமழை தமிழகத்தில் தாமதமாகி வருகிறது. மழையை எதிர்பார்த்து விவசாயிகள் ஆடிப்பட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.