UPDATED : செப் 05, 2026 11:40 PM
ADDED : செப் 05, 2026 08:02 PM

திருப்பூர்;''சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மாணவர்கள் கைப்பேசி பயன்பாட்டை குறைத்து, கவனச் சிதறலின்றி படிக்க பழக வேண்டும்,'' என, கால்நடைத்துறை அமைச்சர் கமலி அறிவுரை வழங்கினார்.
கடந்த, 2025-26ம் கல்வியாண்டில் நடந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், திருப்பூர் மாவட்டத்தில், 213 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றன. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 2,200 தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, காங்கயம் நத்தக்காடையூரில் உள்ள இ.பி.இ.டி., கல்லுாரி கலாம் அரங்கில் நேற்று நடந்தது.
கலெக்டர் மனீஷ் நாரணவரே தலைமை வகித்தார். பல்லடம் எம்.எல்.ஏ., ராம்குமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் கமலி பேசியதாவது:
மாணவர்களின் வளர்ச்சியே ஆசிரியர்களின் பெருமை. திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பில் 96.28 சதவீதமும், பிளஸ் 2வில் 97.03 சதவீதமும் தேர்ச்சி கிடைத்துள்ளது. பத்தாம் வகுப்பில் ஒரு மாணவரும், பிளஸ் 2வில் ஏழு மாணவர்களும் தமிழில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பள்ளிப் பாடங்களுடன் வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு நன்றி. புத்தகங்களை தொடர்ந்து வாசிப்பதன் மூலம் மாணவர்களின் அறிவும் திறனும் மேம்படும்.
இன்றைய உலகில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. மாணவர்கள் மொபைல்போன் பயன்பாட்டை தவிர்த்து அல்லது குறைத்து, கவனச் சிதறலின்றி படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்கு சுயஒழுக்கம் மிகவும் அவசியம்.
உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
திருப்பூர் துணை மேயர் பாலசுப்ரமணியம், காங்கயம் கல்வி குழுமங்கள் தலைவர் ராமலிங்கம், முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள், மாவட்ட கல்வி அலுவலர் காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
---
