/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வில்லங்கச் சான்று திருத்தம் விண்ணப்பங்கள் தேக்கம்?
/
வில்லங்கச் சான்று திருத்தம் விண்ணப்பங்கள் தேக்கம்?
வில்லங்கச் சான்று திருத்தம் விண்ணப்பங்கள் தேக்கம்?
வில்லங்கச் சான்று திருத்தம் விண்ணப்பங்கள் தேக்கம்?
ADDED : செப் 04, 2024 02:05 AM
பல்லடம்;பல்லடத்தில், வில்லங்கச் சான்று பிழைத்திருத்தம் செய்வற்கான விண்ணப்பங்கள் தேங்கி கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சார்-பதிவாளர் இதை மறுத்துள்ளார்.
பல்லடம் சார்-பதிவாளர் அலுவலகத்தின் கீழ், பல்லடம், பொங்கலுார் ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 39 கிராமங்கள் உள்ளன. தினமும், நுாற்றுக்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு பணிகள் இங்கு நடந்து வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், அதிகளவில் பத்திரப்பதிவு பணிகள் நடக்கும் அலுவலகங்களில், பல்லடம், கடந்த ஆண்டு முதல் இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த அலுவலகத்தில், வில்லங்க சான்று பிழைத்திருத்தம் செய்வதற்காக வழங்கப்பட்ட நுாற்றுக்கணக்கான மனுக்கள் தேங்கி கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:
வில்லங்கச் சான்றிதழில் ஏற்படும், 'இன்டெக்ஸ் கரெக் ஷன்' எனப்படும் பிழைகளை திருத்தி அமைக்க வேண்டும். இல்லாவிடில், வில்லங்க சான்றிதழில் தவறாக காட்டும். இந்த பிழை திருத்தத்தை மேற்கொள்ள விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது.
இதனால், வங்கி கடன், கிரையம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு உள்ளதா? அல்லது பத்திர அலுவலகத்தில் போதிய ஆட்கள் இல்லையா என்பது தெரியவில்லை.
இது குறித்து பல்லடம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் கேட்டாலும் முறையான பதில் இல்லை. எனவே, மாவட்ட பதிவுத்துறை நிர்வாகம் இதில் தலையிட்டு, வில்லங்க சான்று பிழை திருத்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, விரைவில் கிடைக்க செய்ய வேண்டும் என்றனர்.
இப்பிரச்னை குறித்து, சார்-பதிவாளர் காந்திமணியிடம் கேட்டதற்கு, ''பிழை திருத்த விண்ணப்பங்கள் எதுவும் தேக்கம் இல்லை. ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே உடனுக்குடன் அவற்றுக்கு ஒப்புதல் அளித்து வருகிறோம்,'' என்றார்.