/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தல் பணிகளில் படுமந்தம்! அலுவலர்கள் குளறுபடி: அரசியல் கட்சியினர் தவிப்பு
/
தேர்தல் பணிகளில் படுமந்தம்! அலுவலர்கள் குளறுபடி: அரசியல் கட்சியினர் தவிப்பு
தேர்தல் பணிகளில் படுமந்தம்! அலுவலர்கள் குளறுபடி: அரசியல் கட்சியினர் தவிப்பு
தேர்தல் பணிகளில் படுமந்தம்! அலுவலர்கள் குளறுபடி: அரசியல் கட்சியினர் தவிப்பு
ADDED : மார் 30, 2024 12:09 AM
திருப்பூர்;தேர்தல் கமிஷன், வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வரும் நிலையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகமோ, அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் மந்த நிலையில் திணறி வருவதாக, அரசியல் கட்சியினரும், வாக்காளர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேர்தல் கமிஷன், கடந்த 16ம் தேதி மாலை, லோக்சபா தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. முதல்கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல், திருப்பூர் மாவட்டத்தில், தேர்தல் பணி மந்தகதியிலேயே நடக்கிறது.
தேர்தல் அறிவிப்பு வெளியான, இரண்டு நாட்களுக்கு பிறகுதான் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே, தேர்தல் நடத்தும் அலுவலர் (கலெக்டர்); உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் (சப்--கலெக்டர்) வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
வேட்பாளர் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தையை நாடிவருவர் என தெரிந்தும், முன்னேற்பாட்டை கைவிட்டு விட்டனர். திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று தான், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்யமுடியும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த, 20ல் துவங்கி 27ம் தேதி வரை, வேட்புமனு தாக்கல் நடைபெற்ற நிலையில், சப்-கலெக்டர் அலுவலகத்தில், ஒரு வேட்பாளர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நிறைவு நாளில், 23 வேட்பாளர்கள் அடுத்தடுத்து மனு தாக்கல் செய்யவந்ததால், கலெக்டர் அலுவலக தேர்தல் பணியாளர்கள் திணறினர். மனு வாங்கியோர் எண்ணிக்கை தெரிந்தும், அதற்கேற்ப சரிபார்ப்பு அலுவலர் எண்ணிக்கையை அதிகரிக்க தவறினர்.
'ஆன்லைனும்' செம லேட்!
மதியம், 3:00 மணிக்கு வேட்புமனு தாக்கல் நேரம் முடிந்தநிலையில், 10க்கும் மேற்பட்ட வேட்பாளருக்கு டோக்கன் வழங்கி, அமர வைத்தனர். அனைவரிடமிருந்தும் மனுக்களை பெற்று பணிகளை முடிப்பதற்கு, இரவு, 7:30 மணிக்கு மேலாகிவிட்டது.
வேட்பாளர் விவரம், பிரமாண பத்திரத்தையும் உடனுக்குடன் 'ஆன்லைனில்' அப்டேட் செய்யமுடியவில்லை. மனு தாக்கல் செய்த மொத்த வேட்பாளர் எண்ணிக்கை மற்றும் பெயர் விவர பட்டியலும், செய்தியாளர்களுக்கு வழங்கப்படவில்லை.
லோக்சபா, சட்டசபை என, இதுவரை ஆறு தேர்தல்களை வெற்றிகரமாக நடத்திய திருப்பூர் மாவட்ட நிர்வாகம், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சுணக்கமாகி, மந்தநிலைக்கு மாறியிருப்பது, அரசியல் கட்சியினரையும், வாக்காளர்களையும் கவலை அடைய செய்துள்ளது. உளவுத்துறை போலீஸ் மட்டும், 'ரிப்போர்ட்' கொடுத்தால் போதும் என்று நினைக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
நாமக்கல் போன்ற மற்ற மாவட்டங்களிலெல்லாம், தேர்தல் புகார்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளவேண்டிய அதிகாரிகளின் தொடர்பு எண் பட்டியல்; தேர்தல் நடத்தை விதிகள் அடங்கிய புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், அத்தகைய விவரங்கள் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு கூட்டத்திலும், அரசியல் கட்சி பிரதிநிதிகள் இது குறித்து சொல்லியும், அதிகாரிகள் இதுவரை செவிசாய்க்கவில்லை.
இதேபோல, 'ஸ்டார்' ஓட்டல் அடிப்படையில் 'ரேட் சார்ட்' தயாரிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஏற்கனவே நடத்தப்பட்ட கூட்டத்தில் அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.
'அப்டேட்' செய்யப்பட்ட 'ரேட் சாட்' இன்னும் அரசியல் கட்சியினருக்கு கைக்கு கிடைக்கவில்லை. அவசர தகவல் கேட்க அழைத்தாலும், தேர்தல் பிரிவினர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றனர் என, அரசியல் கட்சியினரும் குறைகூறுகின்றனர்.
தேர்தல் பணியில், பாதி கிணறு தாண்டியிருக்கும் நிலையில், இனியாவது மாவட்ட நிர்வாகம், தேர்தல் பணி ஒருங்கிணைப்பிலும், அனைத்து தகவல் தொடர்பிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், வாக்காளர்களும் எதிர்பார்க்கின்றனர்.

