ADDED : ஜூன் 26, 2024 10:49 PM
திருப்பூர் : பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு, சிறு தொழில் மற்றும் வியாபாரம் செய்வதற்கு, பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய்க்கும் மிகாமல் இருக்கவேண்டும்; விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருப்பது அவசியம்.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்; 1.25 லட்சம் ரூபாய் வரை, 7 சதவீதம்; 1.25 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை 8 சதவீத வட்டி விகிதத்தில் கடன் பெறலாம்.
தனிநபருக்கு, சிறு வர்த்தகம், விவசாயம், கைவினை பொருட்கள், மரபு வழி சார்ந்த தொழில் செய்வதற்காக, அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படும். சுய உதவி குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சம் 1.25 லட்சம் ரூபாய் வரையும், ஒரு குழுவுக்கு அதிகபட்சம், 15 லட்சம் ரூபாய் வரை, 6 சதவீத வட்டிக்கு கடன் வழங்கப்படுகிறது.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, 7 சதவீத வட்டி விகிதத்தில், ஒரு கறவை மாட்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம், 2 மாடுகள் வாங்க, அதிகபட்சம் 60 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும்.
கடனுதவி தேவைப்படுவோர், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகலாம். www.tabcedco.tn.gov.in என்கிற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, விண்ணப்பிக்கலாம்.