/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., கால்வாயில் அதிகரிக்கும் உயிரிழப்பு! முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசர அவசியம்
/
பி.ஏ.பி., கால்வாயில் அதிகரிக்கும் உயிரிழப்பு! முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசர அவசியம்
பி.ஏ.பி., கால்வாயில் அதிகரிக்கும் உயிரிழப்பு! முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசர அவசியம்
பி.ஏ.பி., கால்வாயில் அதிகரிக்கும் உயிரிழப்பு! முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசர அவசியம்
ADDED : ஏப் 09, 2024 11:55 PM
திருப்பூர்;உடுமலை திருமூர்த்தி அணையில் துவங்கும், பி.ஏ.பி., பாசன கால்வாய், கடைமடையான திருப்பூர் மாவட்டம், காங்கயம் வரை, 124 கி.மீ., துாரம் நீள்கிறது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், 3.77 லட்சம் ஏக்கர் பாசன நிலம் பயன்பெறும் வகையில், 1,012 கி.மீ., துாரத்துக்கு, கிளை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
பாசன நீர், நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்துக்கு, ஆண்டுக்கு, இரண்டு முதல், மூன்று கட்டங்களாக, தண்ணீர், திறந்து விடப்படுகிறது. விவசாய பலன் கருதி அமைக்கப்பட்டுள்ள இந்த கால்வாயில், தண்ணீர் திறக்கப்படும் போது, உயிரிழப்பு ஏற்படுவதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, காங்கயம் - வெள்ளக்கோவில் இடைபட்ட கால்வாயில் குளிக்க செல்லும் மாணவர்கள், பெண்கள் என பலரும் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.
போலீசார் கூறியதாவது:நீரில் இறங்கி விளையாடவும், நீச்சல் பழகும் ஆர்வத்தில் பலரும், நீரில் இறங்கி சிக்கிக் கொள்கின்றனர். சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள், விடுமுறை நாளை கழிக்க வரும் உறவினர்கள் என பலரும், கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை பார்த்தவுடன், உற்சாகத்தில், தன்னையும் மறந்து நீரில் இறங்கி விடுகின்றனர்.
உந்தித்தள்ளும் நீரோட்டத்தில் சிக்கி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகின்றனர்.
மூன்று நாளுக்கு முன்பு கூட, பொங்கலுார் கால்வாயில் வெள்ளத்தில் சிக்கி சிறுமியர் உட்பட, 3 பேர் உயிரிழந்தனர்.மேலும், கால்வாய் பகுதிகளில், அத்துமீறி வாகனங்கள் கழுவுவது, மது அருந்துவது, துணி துவைப்பது, குளிப்பது போன்ற விதிமீறல்களும் தொடர்கின்றன. இதுபோன்ற விபத்துகளை தடுக்க, அபாயகரமான பகுதிகளில், எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.
கால்வாய் பகுதிகளில், போலீசார், பொதுப்பணித்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு, அத்துமீறி செயல்படுவோரை கண்டிக்க வேண்டும்; இதற்கு தேவையான போலீசார் மற்றும் ஊழியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

