ADDED : மே 11, 2024 12:13 AM

பல்லடம்:பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மழை வேண்டி சிறப்பு வருண யாகம் நடந்தது.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு யாகத்தை துவக்கி வைத்து காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் பேசியதாவது:
மழை பொழிந்து, விவசாயம் செழித்து, தானியங்கள் பெருகினால் தான் அனைத்து உயிர்களும் உயிர் வாழ முடியும். தான்ய லட்சுமி வரவில்லை என்றால் வீட்டில் உணவு கிடையாது. அரிசி இல்லை எனில் என்ன செய்வது? பணத்தையா சாப்பிட முடியும்? பக்திக்கு மிகவும் சக்தி அதிகம்.
நமக்குள்ளேயே இருப்பதால் இறைவனை 'கடவுள்' என்கிறோம். அதன் பயன்தான் இன்று மழை பெய்து வருகிறது. நல்லது செய்ய நேரம் காலம் எதுவும் தேவையில்லை. மரத்தை எல்லாம் வெட்டினோம். மரம், குளம் இருந்த இடமெல்லாம் வீடாக்கினோம். அதன் பயனை இன்று அனுபவிக்கிறோம்.
கோவிலுக்குச் சென்றால் நமக்காகவும், நமது குடும்பத்துக்காகவும் மட்டுமே வேண்டுவோம். ஆனால், உலகத்தை மறந்து விடுவோம். வருணன் அப்படியல்ல; உலகம் முழுவதும் சென்று உயிர்களைக் காக்கிறார். ஆறறிவு படைத்த மனிதப்பிறவி சாதாரணமானதல்ல. இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு வருண பகவான் யாகத்தை தொடர்ந்து, அபிஷேக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மையப்பராக சிவபெருமான் பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.
வருண பகவான் கருணை 'மழை'
சிறப்பு யாகம் துவங்கும் போதே அதனுடன் மழையும் துவங்கியது. ஏறத்தாழ ஒரு மணி நேரம் மழை நீடித்தது. மழை வேண்டி விவசாயிகள் நடத்திய யாகத்தில், வருண பகவான் கருணை காட்டியது, விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்தது.