/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாரதம் எங்களின் சுவாசமே! மூவர்ணக்கொடி பட்டொளி வீச சுதந்திர தின விழா
/
பாரதம் எங்களின் சுவாசமே! மூவர்ணக்கொடி பட்டொளி வீச சுதந்திர தின விழா
பாரதம் எங்களின் சுவாசமே! மூவர்ணக்கொடி பட்டொளி வீச சுதந்திர தின விழா
பாரதம் எங்களின் சுவாசமே! மூவர்ணக்கொடி பட்டொளி வீச சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2024 12:22 AM

திருப்பூர் : திருப்பூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த சுதந்திர தின விழா, மாணவ, மாணவியரின் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளால், களைகட்டியது. மொத்தம் 3.05 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில், நாட்டின் 78வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் வரவேற்றார். கலெக்டர் கிறிஸ்துராஜ் தேசியக்கொடி ஏற்றினார். பேண்டு வாத்திய குழுவினர், தேசிய கீதம் இசைக்க, கொடி வணக்கம் செலுத்தப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட ஜீப்பில், கலெக்டர் மற்றும் எஸ்.பி., அபிஷேக்குப்தா ஆகியோர், போலீஸ் படையை பார்வையிட்டு, கொடி மேடை திரும்பினர். துப்பாக்கி ஏந்திய போலீசாரின் கம்பீர அணிவகுப்பு நடந்தது. கம்பெனி கமாண்டர், படை பிரிவினரை வழிநடத்திச்சென்றார். ரஞ்சித்குமார் தலைமையிலான குழுவினரின் பேண்ட் வாத்தியக்குழுவினர் முன்னே சென்றனர்.
சமாதானத்தை வலியுறுத்தும்வகையில், புறாக்கள் மற்றும் மூவர்ண பலுான் வானில் பறக்கவிடப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் கவுரவிக்கப்பட்டனர். சிறப்பாக பணிபுரிந்துவரும் மாவட்ட போலீசார் 12 பேர்; மாநகர போலீசார் 5 பேர் மற்றும் அரசு அலுவலர்கள் 89 பேருக்கு நற்சான்று வழங்கப்பட்டது.
நலத்திட்ட உதவி
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, சுதந்திர தின விழாவில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டுறவு, மாவட்ட தொழில் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் உதவி ஆணையர், தோட்டக்கலை, வேளாண், வேளாண் பொறியியல், சிறுபான்மையினர் நலத்துறைகள் சார்பில், பயனாளிகள் 84 பேருக்கு, மொத்தம் 3 கோடியே 5 லட்சத்து 9,869 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சப் கலெக்டர் சவுமியா, போலீஸ் கமிஷனர் லட்சுமி, உள்பட அனைத்து அரசு துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் பங்கேற்றனர்.
கண்கவர் கலை நிகழ்ச்சி
சுதந்திர தின விழாவின் நிறைவாக, பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 'கப்பலேறி போயாச்சு' பாடலுக்கு ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்; 'கொடி பறக்குது' பாடலுக்கு விகாஷ் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவியர்; 'வந்தே மாதரம்' பாடலுக்கு வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவியர் மூவர்ண ஆடை அணிந்துவந்து நடனமாடினர். 'தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி' பாடலுக்கு, பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியரும்; 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' பாடலுக்கு விவேகம் மெட்ரிக் மாணவர்களும்; பாடலுக்கு ஆடியபடி சிலம்பம் சுழற்றி பூலுவப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் அசத்தினர்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்றோரின் 'வந்தேமாதரம்' முழக்க விண்ணதிரச் செய்தது.