/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயிர் பலி வாங்க காத்திருக்கும் விளம்பர பலகைகள்
/
உயிர் பலி வாங்க காத்திருக்கும் விளம்பர பலகைகள்
ADDED : மே 04, 2024 11:04 PM

அவிநாசி:அவிநாசி, தெக்கலுார் அருகே கடந்த ஆண்டு 40 அடி உயரம் கொண்ட விளம்பரப்பலகைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விளம்பரப் பலகை சரிந்து மூன்று பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
அதன்பின், மாவட்ட நிர்வாகம் அவசர கதியில் விளம்பர பலகைகளுக்கு கட்டுப்பாடு விதித்தது. சாலை ஓரங்களிலும் கட்டடங்களின் மேல் பகுதியிலும் உயரமான இடங்களிலும் எந்த ஒரு விளம்பரப் பலகைகளும் வைக்க கூடாது என உத்தரவு பிறப்பித்தது.
தற்போது அந்த உத்தரவையும் மீறி கோவை - சேலம் பைபாஸ் ரோட்டில், தெக்கலுார் வடுகபாளையம் பகுதியிலும், கருமத்தம்பட்டி செல்லும் வழியிலும் ரோட்டின் ஓரத்தில் மிகப்பிரமாண்டமாக 50 அடி நீளமும் 40 அடி உயரமும் கொண்ட விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் யாரிடம் அனுமதி பெற்றார்கள். அனுமதி கொடுத்தது யார் என பல்வேறு விதமான கேள்விகளை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.
எவ்விதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் ரோட்டின் ஓரத்தில் மிகப்பெரிய விளம்பர பலகைகளை வைப்பது வாகன ஓட்டிகளையும் நடந்து செல்பவர்களையும் அச்சுறுத்தும் படி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உடனடியாக அரசு தலையிட்டு விளம்பர பலகைகளை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழப்பு சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.