/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூளைச்சாவு அடைந்த பெண்ணின் சிறுநீரகங்களால் 2 பேர் மறுவாழ்வு
/
மூளைச்சாவு அடைந்த பெண்ணின் சிறுநீரகங்களால் 2 பேர் மறுவாழ்வு
மூளைச்சாவு அடைந்த பெண்ணின் சிறுநீரகங்களால் 2 பேர் மறுவாழ்வு
மூளைச்சாவு அடைந்த பெண்ணின் சிறுநீரகங்களால் 2 பேர் மறுவாழ்வு
ADDED : ஜூன் 25, 2024 06:53 AM

திருப்பூர்: திருப்பூரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் சிறுநீரகங்கள் இருவருக்குப் பொருத்தப்பட்டன.
திருப்பூர், மங்கலம் ரோடு, கே.எம்.எஸ்., கார்டனை சேர்ந்தவர் கண்ணன்; இவரது மனைவி புஷ்பலதா, 50; பனியன் நிறுவன தொழிலாளர்கள். கடந்த 21ம் தேதி பணி முடிந்து சாலையை கடக்கும்போது, பைக் மோதியதில் புஷ்பலதா படுகாயமடைந்தார். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்றுமுன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.
இவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க இவரது குடும்பத்தினர் முன்வந்தனர். நேற்று காலை, இவரது இரு சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டு தயாராக இருந்த மருத்துவக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
கோவைக்கு, 40 நிமிடத்திலும், சேலத்துக்கு, ஒன்றரை மணி நேரத்திலும் ஆம்புலன்ஸ் மூலம் சிறுநீரகங்கள் சென்றடைந்தன. அங்கு அறுவை சிகிச்சை கூடங்களில் தயாராக இருந்த நோயாளிகளுக்கு நேற்று மாலை பொருத்தப்பட்டன; இருவர் மறுவாழ்வு பெற்றனர்.புஷ்பலதா குடும்பத்தினருக்கு அரசு டாக்டர்கள், பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.
மருத்துவக் கல்லுாரி டீன் முருகேசன், மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் புஷ்பலதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியே கொண்டுவரும் வழிநெடுகிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலிய பயிற்சி பள்ளி மாணவியர் உள்ளிட்டோர், புஷ்பலதா உடலுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
புஷ்பலதா மகன் சந்தோஷ்குமார் கூறுகையில், ''அம்மாவின் சிறுநீரகங்களால் இரண்டு பேருக்கு மறு வாழ்வு கிடைத்துள்ளது. இறந்தும் அவர் உயிர் வாழ்கிறார்'' என்றார்.