/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயற்கையை உயிர்ப்பித்தலே இனிய 'சுதந்திரம்'
/
இயற்கையை உயிர்ப்பித்தலே இனிய 'சுதந்திரம்'
ADDED : ஆக 14, 2024 11:17 PM

சுதந்திரத்தின் உரிமை, சுற்றுச்சூழலை நிலைகுலைப்பதல்ல; இயற்கையை அதன் போக்கில் நிலைத்திருக்கச் செய்வது; அதன் உயிர்ப்புத்தன்மையைக் குலைக்காமல் இருப்பதுதான்.
இதை உணர்ந்துதான், திருப்பூர் வெற்றி அமைப்பு, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளது. கடந்த, 2015ல் துவங்கி, கடந்த வாரம் வரை, 19 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன. வறட்சியான பகுதியில், 80 வகை மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டது; அடுத்த சில ஆண்டுகளில், மரம், செடி, கொடி என, 240 வகை தாவரம் வளர்ந்திருந்தது. பட்டாம்பூச்சிகள் 30 வகையில் வசிக்கின்றன. மரம் வளர்த்த இடத்தில், பறவை வந்தது; செடி - கொடிகள் வளர்ந்தன; பூச்சியினங்கள் பெருகின; ஊர்வன அதிகரித்தன.
'செங்காந்தள்' வளரும் இடமே, இயற்கையின் அடையாளம்; 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட குறுங்காடுகளில் 'செங்காந்தள்' மலர்ந்து காணப்படுகிறது.
இந்தாண்டு முடியும்போது, 21 லட்சம் மரங்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், திருப்பூர் மாநகராட்சியுடன் இணைந்து, அறிவியல் பூங்கா என்ற பெயரில், மூங்கில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இடுவாய் ஊராட்சி, சின்னக்காளிபாளையத்தில், 12 ஏக்கர் பரப்பில், 50 வகை மூங்கில் ரகங்களை நட்டு, பூங்கா, காட்சியரங்கு, விளையாட்டு பூங்கா வசதிகளுடன் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழலைக் காத்ததன் மூலம், தலைமுறை தலைமுறையாக தலைநிமிர்ந்து வாழ முடியும். இயற்கையின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதுதானே, நமக்குக் கிடைக்கும் ஒப்பற்ற சுதந்திரம்.